சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நடிகர் அஜித் குமார் வீடு உள்ளது. இந்த வீட்டில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது.
உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் நடிகர் அஜித் வீட்டில் சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. வெறும் புரளி என்பது தெரியவந்தது.
போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், மரக்காணத்தை சேர்ந்த புவனேஸ்வரன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அவர் கைது செய்யப்பட்டார். இவர், நடிகர் விஜய் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
அண்மை காலமாக நடிகர் ரஜினி, விஜய் உள்ளிட்ட பிரபலங்களின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இவ்வாறு மிரட்டல் விடுவோருக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.