பிரம்மோஸ் ஏவுகணை சீறிப் பாய்ந்தது

பிரம்மோஸ் ஏவுகணை சீறிப் பாய்ந்தது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாக்கி தூள்தூளாக்கியது. 

இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து இந்த ஏவுகணைகளை தயாரித்து வருகின்றன. இந்த ஏவுகணைகளை நீர்மூழ்கிகள், போர்க்கப்பல்கள், போர் விமானங்கள், நிலத்தில் இருந்து ஏவ முடியும்.

இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படையில் இந்த ஏவுகணைகள் செயல்பாட்டில் உள்ளன.

உலகின் அதிவேக சூப்பர்சானிக் ஏவுகணையாக பிரம்மோஸ் உள்ளது. இது ஒலியைவிட 3 மடங்கு வேகத்தில் சீறிப் பாயக்கூடியது.

இந்த ஏவுகணைகளின் வேகம், சீறிப் பாயும் தொலைவு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2017 மார்ச்சில் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனையின்போது 450 கி.மீ. தொலைவு வரை பாய்ந்து துல்லியமாக இலக்கை தாக்கி அழித்தது.

அதன்பிறகு குறுகிய தொலைவு பாயும் ஏவுகணை சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த வரிசையில் இந்திய ராணுவத்தின் சார்பில் அந்தமான் தீவில் நேற்று பிரம்மோஸ் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.

ஒரு தீவில் இருந்து சீறிப் பாய்ந்த ஏவுகணை மற்றொரு தீவில் நிலை நிறுத்தப்பட்டிருந்த இலக்கை மிகத் துல்லியமாக தாக்கி தகர்த்தது. இது  290 கி.மீ. தொலைவு சீறிப் பாயும் குறுகிய தொலைவு ஏவுகணையாகும்.

காஷ்மீர் விவகாரத்தால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை நீடிக்கிறது. லடாக் எல்லை விவகாரத்தால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தற்போது போர் பதற்றம் அதிகரித்துள்ளது. 

இதன்காரணமாக கடந்த 35 நாட்களில் மட்டும் 10 ஏவுகணைகளின் சோதனைகளை மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் (டிஆர்டிஓ) நடத்தியுள்ளது. 

அடுத்த ஒரு வாரத்தில் இந்திய விமானப் படை, கடற்படை சார்பில் பிரம்மோஸ் ஏவுகணைகள் அடுத்தடுத்து சோதனை செய்யப்பட உள்ளன. 

லடாக் மற்றும் அருணாச்சல பிரதேச எல்லைப் பகுதிகளில் இந்த ரக ஏவுகணைகளை இந்திய ராணுவம் தயார் நிலையில் நிறுத்தி வைத்துள்ளது.

இந்திய விமானப்படையின் 40 சுகோய் ரக போர் விமானங்களில், இந்த ஏவுகணைகளை பொருத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

வங்க கடல், அரபிக் கடலில் ரோந்து சுற்றும் போர்க் கப்பல்களிலும் இந்த ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. 

அடுத்த கட்டமாக பிரம்மோஸ் ஏவுகணை சீறிப் பாயும் தொலைவை 800 கி.மீ. ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு 1,500 கி.மீ. தொலைவு பாயும் ஏவுகணைகளை தயாரிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கும் பிரம்மோஸ் ஏவுகணைகளை செயற்கைக்கோள்கள் மூலம் ஏவும் ஆராய்ச்சியையும்  டிஆர்டிஓ மேற்கொண்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *