விரும்பும் பெண்ணிடம் முதல்முறையாக காதலை சொல்வதில் இளைஞர்கள் பல்வேறு புதுமைகளை செய்து அசத்தி வருகின்றனர். அவை ஒவ்வொன்றும் செய்தியாக வெளியாக ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகின்றன.

அந்த வரிசையில் பிரிட்டனை சேர்ந்த காதலர் தீக்குளித்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். அவரது பெயர் ரிக்கி ஆஷ். சண்டை பயிற்சியாளரான இவர் கேத்ரினா என்பவரை காதலித்தார்.
சில நாட்களுக்கு முன்பு கென்ட் நகரில் கேத்ரினா நர்ஸாக பணியாற்றும் மருத்துவமனைக்கு ஆஷ் நேரடியாக சென்றார்.
முக்கியமான விஷயத்தை கூற வேண்டும் என்று தனி இடத்துக்கு அவரை அழைத்து வந்தார். அங்கு ரிக்கி ஆஷின் நண்பர்களும் இருந்தனர்.
ரிக்கி ஆஷ் கோட், சூட்டில் நிற்க அவரது நண்பர்கள் அவரது உடையில் திடீரென தீ வைத்தனர். உடல் முழுவதும் தீப்பற்றி எரிய காதலி கேத்ரினா முன்பு முழங்காலிட்டு ரிக்கி தனது காதலை கூறினார்.
கோட் பையில் இருந்து மோதிரத்தை எடுத்து நீட்டி “என்னை திருமணம் செய்து கொள்வாயா” என்று தீயாக கேட்டார்.
தீ மளமளவென்று பற்றி எரியத் தொடங்கியதும் ஆஷின் நண்பர்கள் விரைந்து வந்து தீயணைப்பான்கள் மூலம் தீயை முழுமையாக அணைத்தனர்.
முதலில் அதிர்ச்சியில் உறைந்த கேத்ரினா, பின்னர் சுதாரித்துக் கொண்டு ஆஷின் காதலை ஏற்றுக் கொண்டார்.
காதலை சொல்வதற்காக இப்படியா தீக்குளிப்பது ஆஷிடம் நிருபர்கள் கேட்டனர். இதெல்லாம் எனக்கு ஜூஜூபி என்று ஆஷ் கெத்தாக கூறியுள்ளார்.