பஹ்ரைன் தலைநகர் மனாமா அருகேயுள்ள ஜுபைரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பர்தா அணிந்த பெண் விநாயகர் சிலைகளை உடைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வளைகுடாவை சேர்ந்த குட்டி தீவு நாடு பஹ்ரைன். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அந்த நாட்டின் மக்கள் தொகை 13 லட்சமாகும்.
அங்கு 4 லட்சம் பேர் இந்தியர்கள் உள்ளனர்.மதரீதியாக அந்த நாட்டு மக்களில் 70 சதவீதம் பேர் முஸ்லிம்கள். சுமார் 14.5 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள். 9.8 சதவீதம் பேர் இந்துக்கள்.
பவுத்த மதத்தினர் 2.5 சதவீதம் பேர் உள்ளனர்.
பஹ்ரைன் தலைநகர் மனாமா அருகேயுள்ள ஜுபைரில் இந்தியர்கள் அதிகமாக வசிக்கின்றனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
சில நாட்களுக்கு முன்பு சூர்ப்பர் மார்க்கெட்டுக்கு வந்த பர்தா அணிந்த பெண், விநாயகர் சிலைகளை கீழே தள்ளி உடைத்தார்.
கடை ஊழியரிடம் அரபி மொழியில் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சம்பந்தப்பட்ட பெண் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.