மாவட்டங்களுக்கு இடையே பஸ் சேவை

மாவட்டங்களுக்கு இடையே பஸ் சேவை செப்டம்பர் 7-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

“கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

அதேசமயம் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திலும் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாவட்டத்துக்குள்ளான பொது பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வணிக வளாகங்கள், தங்கும் விடுதியுடன்கூடிய ஓட்டல்கள் உள்ளிட்டவற்றை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. எனினும் சில கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் செப்டம்பர் 30-ம் தேதி நள்ளிரவு 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி முதல் மாவட்டங்களுக்குள் பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு முக்கிய பணி மற்றும் வியாபார நிமித்தமாக சென்று வர பொதுமக்களிடம் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

மக்களின் நலனை கருத்தில் கொண்டு நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செப்டம்பர் 7-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே அரசு, தனியார் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

முகக் கவசம் அவசியம்

மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. எனினும் வெளியில் செல்லும்போதும் பொதுஇடங்களிலும் மக்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும்.

வீட்டிலும் பணியாற்றும் இடங்களிலும் அடிக்கடி சோப்பு போட்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

இவை உள்பட தமிழக அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

அப்போதுதான் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க முடியும்” என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *