தமிழகத்தில் பஸ் சேவை தொடக்கம்

தமிழகத்தில் பஸ் சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் 7 போக்குவரத்து கழகங்களின் கீழ் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பொது போக்குவரத்து முடக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த 5 மாதங்களாக அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை.
இந்த சூழ்நிலையில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் மாவட்டத்துக்குள் பஸ்களை இயக்க அரசு அனுமதி அளித்தது.

அதன்படி செவ்வாய்க்கிழமை முதல் தமிழகம் முழுவதும் மாவட்டத்துக்குள் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஆனால் தொலைதூர பஸ் சேவைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதன்காரணமாக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள், தனியார் ஆம்னி பஸ்கள் இயக்கப்படவில்லை.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ரயில் சேவை இல்லாத நிலையில் அனைத்து மாவட்டங்களுக்கும் தொலைதூர பஸ்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனியார் பஸ்கள் இயங்காது

ஐம்பது சதவீத பயணிகளுடன் தனியார் பேருந்துகளை இயக்க முடியாது என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலர் தருமராஜ் தெரிவித்துள்ளார்.
“கொரோனா ஊரடங்கால் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளோம்.

வரிவிலக்கு உள்ளிட்ட எங்களது கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை. தற்போது 50 சதவீத பயணிகளுடன் மாவட்டத்துக்குள் பஸ்களை இயக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

அரசு விதிமுறைகளின்படி பஸ்களை இயக்கினால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படும். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண 100 சதவீத பயணிகளுடன் பஸ்களை இயக்க அனுமதி வழங்க வேண்டும். அதுவரை தனியார் பஸ்களை இயக்க மாட்டோம்” என்று தருமராஜ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *