மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாது என்பது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் 11 மாநிலங்களில் காலியாக உள்ள 54 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. மத்திய பிரதேசம் 28, குஜராத் 8, உத்தர பிரதேசம் 7, ஒடிசா, நாகாலாந்து, கர்நாடகா, ஜார்க்கண்டில் தலா 2, சத்தீஸ்கர், தெலங்கானா, ஹரியாணாவில் தலா ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மத்திய பிரதேச இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைந்தார். இதன்காரணமாக மத்திய பிரதேசத்தில் கமல்நாத் ஆட்சி கவிழ்ந்து கடந்த மார்ச் 23-ம் தேதி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி பதவியேற்றது.
ஜோதிர் ஆதித்ய சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்களின் ராஜினாமா மற்றும் உயிரிழந்த எம்எல்ஏக்களால் 28 தொகுதிகள் காலியாகின. அந்த தொகுதிகளுக்கு கடந்த 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
பாஜகவுக்கு தற்போது 107 எம்எல்ஏக்கள் உள்ளனர். இடைத்தேர்தலுக்குப் பிறகு மொத்தமுள்ள 230 எம்எல்ஏக்களில் பெரும்பான்மையான நிரூபிக்க 116 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள கூடுதலாக 9 எம்எல்ஏக்களின் ஆதரவு போதுமானது.
இடைத்தேர்தல் நடைபெற்ற 28 தொகுதிகளில் பாஜகவுக்கு 16 முதல் 18 தொகுதிகள் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு ஆபத்தில்லை என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸுக்கு 88 எம்எல்ஏக்கள் மட்டும் உள்ளனர். அந்த கட்சி பெரும்பான்மையை எட்ட 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். காங்கிரஸுக்கு 11 இடங்கள் வரை கிடைக்கலாம் என்று கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.