குடியுரிமை திருத்த சட்டம் வரும் ஜனவரியில் அமல் செய்யப்படும் என்று பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா தெரிவித்துள்ளார்.
“குடியுரிமை திருத்தச் சட்டம் வரும் ஜனவரியில் அமலுக்கு வரும். அதன்பிறகு வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவில் அடைக்கலம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்த மதத்தினர், ஜெயின் மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு ஆகியோருக்கு குடியுரிமை வழங்க முடியும்.
இதில் முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை என்று கூறி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை முஸ்லிம் நாடுகள் என்பதால் சிஏஏ சட்டத்தில் முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை என்று மத்திய அரசு வாதிட்டது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சிஏஏ சட்டம் அமல் செய்யப்படாமல் இருந்தது. தற்போது அடுத்த மாதம் சிஏஏ சட்டம் அமல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.