நில உரிமையாளர்களின் அனுமதியின்றி மின் கம்பம் அமைப்பதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், நெலாலி கிராமத்தில் இருந்து ராசிபாளையம் வரை உயர் அழுத்த மின் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக விவசாய நிலங்களில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதை எதிர்த்து பொம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த ஜெயந்தி உட்பட 11 விவசாயிகள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். “கடந்த 1885-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட டெலிகிராப் சட்டத்தின் கீழ் நில உரிமையாளர்களின் கருத்தை கேட்காமல் நிலத்தை அரசின் பயன்பாட்டுக்கு எடுத்துள்ளனர்.
அரசியமைப்புக்கு முரணான 135 ஆண்டுகல் பழமையான டெலிகிராப் சட்டத்தின் பிரிவு 10, 16-ஐ ரத்து செய்ய வேண்டும்” மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கு நவம்பர் 27-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்தார்.