சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் சாம்வின்சென்ட், அரும்பாக்கம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் சரவணன் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமசந்திரமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் சாம்வின்சென்ட், சரவணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார். அந்த எப்ஐஆரில் ராயப்பேட்டையைச் சேர்ந்த அக்பர் அகமது என்பவர் சென்னை விபச்சார தடுப்பு பிரிவில் 2018ம் ஆண்டு ஐனவரி மாதம் முதல் மே மாதம் வரை யூனிட் 1ல் இன்ஸ்பெக்டர் சரவணனும் யூனிட் 2-ல் இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட்டும் பணியாற்றி வந்தனர். இவர்கள் பணியாற்றிய காலக்கட்டத்தில் பிரபல விபச்சார புரோக்கர்களான டெய்லர் ரவி, பூங்கா வெங்கடேசன் ஆகியோரிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு பாலியல் தொழில் நடந்ததைக் கண்டுக்கொள்ளாமல் இருந்திருக்கின்றனர்.
இன்ஸ்பெக்டர்கள் சாம்வின்சென்ட், சரவணன் ஆகியோர் புரோக்கர்கள் டெய்லர் ரவி, பூங்கா வெங்கடேசனுடன் தொடர்பில் இருந்திருப்பது ஆதாரம் பூர்வமாக தெரியவந்திருக்கிறது. அதனால்தான் இருவரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இன்ஸ்பெக்டர் சரவணன், டெய்லர் ரவி மீது ஒரே ஒரு வழக்கை மட்டும் பதிவு செய்திருக்கிறார். ஆனால் அந்த வழக்கிலும் அவரைக் கைது செய்யவில்லை. இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட்டும் டெய்லர் ரவியை கைது செய்யவில்லை. இன்ஸ்பெக்டர் சரவணன் புரோக்கர் பூங்கா வெங்கடேசன் மீது எந்தவழக்கும் பதிவு செய்யவில்லை. இன்ஸ்பெக்டர்கள் சாம்வின்சென்ட், சரவணன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இருந்ததால் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட் குடியிருந்து வருகிறார். இவரின் வீட்டுக்கு இன்று காலை சென்ற லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார், அனைவரின் செல்போன் நம்பர்களையும் வாங்கி வைத்துக் கொண்டனர். வீட்டிலிருந்து யாரையும் வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை. அதைப் போல வெளியிலிருந்து வீட்டுக்குள் செல்லவும் யாரும் அனுமதிக்கவில்லை. இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தி வழக்குக்கு தேவையான சில ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர். அதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட்டிடம் போலீஸார் விசாரித்தனர்.
இதையடுத்து அங்கிருந்து போலீஸார் சென்றனர். இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட் வீட்டில் சோதனை நடந்த சமயத்தில் புழுதிவாக்கத்தில் உள்ள இன்ஸ்பெக்டர் சரவணன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்தும் சில முக்கிய ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். அதன்அடிப்படையில் இன்ஸ்பெக்டர்கள் சாம்வின்சென்ட், சரவணன் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் 1997-ம் ஆண்டு சென்னை காவல் துறையில் பணிக்குச் சேர்ந்தார். சென்னையில் பள்ளிக்காரனை, கீழ்ப்பாக்கம், திருமுல்லைவாயல் உள்ளிட்ட சில காவல் நிலையங்களில் பணியாற்றி வந்திருக்கிறார். பள்ளிக்காரனை, கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட் பணியாற்றினார்.
முக்கிய வழக்குகளை திறம்பட விசாரித்த இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்திருப்பது அவரின் பேட்ஜ் காவல்துறை இன்ஸ்பெக்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதைப்போல இன்ஸ்பெக்டர் சரவணன், துரைப்பாக்கம், திருச்ச ரெயில்வே காவல் நிலையத்தில் பணியாற்றியவர்.
இவரும் 1997-ம் ஆண்டு தமிழக காவல் துறையில் பணிக்குச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் விபச்சார தடுப்பு பிரிவில் பணியாற்றியபோதுதான் அந்தப்பிரிவில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன.
அதில் இரண்டு இன்ஸ்பெக்டர்களுக்கும் இடையே நடந்த பணிப்போர் காரணமாகவும் இருவரும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் சிக்கிக் கொண்டதாகவும் ஒரு தகவல், காவல்துறை வட்டாரத்தில் பரவிவருகிறது.
எத்தனையோ வழக்குகளைப் பதிவு செய்து விசாரித்த இன்ஸ்பெக்டர்கள் சாம்வின்சென்ட், சரவணன் ஆகியோர் மீதே லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.