ராஜஸ்தான் ஆடியோ விவகாரம்- மத்திய அமைச்சர் மீது வழக்கு

குதிரை பேர ஆடியோ விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்துக்கு எதிராக ராஜஸ்தானில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே சில நாட்களுக்கு முன்பு பகிரங்கமாக மோதல் வெடித்தது.

பாஜகவுடன் சேர்ந்து ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக சச்சின் பைலட் மீது அசோக் கெலாட் குற்றம் சாட்டினார். அதிகாரத்தை பறித்து மக்கள் பணியை தடுத்ததாக முதல்வர் மீது சச்சின் பைலட் புகார் கூறினார்.


இதனிடையே கொறடா உத்தரவு பிறப்பித்தும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காததால் கடந்த 14-ம் தேதி சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. அவரது ஆதரவாளர்களான 2 அமைச்சர்களும் நீக்கப்பட்டனர்.

அவரையும் அவரது ஆதரவாளர்களையும் தகுதி நீக்கம் செய்ய சட்டமன்ற சபாநாயகர் ஜோஷி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதை எதிர்த்து பைலட் அணி சார்பில் ராஜஸ்தான் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


இந்நிலையில் ஆட்சி கவிழ்ப்பு தொடர்பாக மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத்தும், சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் பன்வர்லால் சர்மா, சஞ்சய் ஜெயின் பேசிய ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகின்றன. மொத்தம் 3 உரையாடல் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன.

அவற்றில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை பணம் கொடுத்து இழுப்பது தொடர்பாக பேசப்பட்டுள்ளது. இந்த குதிரை பேர ஆடியோவில் உள்ள குரல் என்னுடையது இல்லை என்று அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மறுப்பு தெரிவித்துள்ளார்.


எனினும் ஆடியோ விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் சிறப்பு படை போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன்பேரில் அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், எம்எல்ஏக்கள் பன்ர்லால் சர்மா, சஞ்சய் ஜெயின் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.


குதிரை பேரத்தில் ஈடுபட்ட அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *