ரேஷன் கடைகளில் கேமரா கண்கள் பொருத்தக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த சிரில் அலெக்சாண்டர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
“தமிழகத்தில் 32 ஆயிரத்து 722 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. கடந்த 2011-ம் ஆண்டு முதல் ரேஷன் கடைகளில் இலவசமாக அரிசி வழங்கப்படுகிறது. தற்போது கொரோனா நிவாரணமாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
ஆனால் ரேஷன் பொருட்களை மக்களை முறையாக சென்றடையவில்லை. கள்ளச்சந்தையில் ரேஷன் பொருட்கள் விற்கப்படுகின்றன.
எனவே அனைத்து ரேஷன் கடைகளிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்க உத்தரவிட வேண்டும்” என்று சிரில் அலெக்சாண்டர் தனது மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.