சாதிவாரி கணக்கெடுப்புக்கு தனி ஆணையம்

சாதிவாரி கணக்கெடுப்புக்கு தனி ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி விரிவான அறிக்கை வெளியிட்டார்.

“தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், சமுதாய அமைப்புகளும் சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பல்வேறு காலக்கட்டங்களில் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  இதன் பயன் அனைத்து பிரிவினருக்கும் சென்றடைவதை அரசு உறுதிபடுத்த வேண்டியுள்ளது.

மேலும், 69 சதவீத இடஒதுக்கீடு சம்பந்தமான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்கையும் எதிர்கொள்ள இத்தகைய புள்ளி விபரங்கள் தேவைப்படுகின்றன.  இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற தற்போதைய காலக்கட்டத்தில் உள்ள சாதிவாரியான அளவிடக்கூடிய முழுமையான புள்ளிவிவரங்கள் அவசியம் தேவைப்படுகிறது. எனவே, தமிழ்நாடு முழுவதும் சாதிய அடிப்படையிலான புள்ளிவிவரத்தை சேகரிப்பதால் மட்டுமே முழு தகவல் கிடைக்கப் பெறும். சாதி வாரியான தற்போதைய நிலவரப்படியான புள்ளி விவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் உரிய தரவுகளை சேகரித்து, அறிக்கை சமர்ப்பிக்க அதற்கென பிரத்யேக ஆணையம் ஒன்று அமைக்கப்படும்.

ஜெயலலிதா வழியில் செயல்படும், தமிழக அரசும் அதே உறுதியில் செயல்பட்டு சமூக நீதியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்” என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *