“3 உள்ளாடைகள்; 18 ரத்த மாதிரிகள்”- சிபிஐயிடம் சிக்கிய சிசிடிவி காட்சிகள்#Sathankulam

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ போலீசாரிடம், 3 உள்ளாடைகள், கைலிகள், 18 ரத்த மாதிரிகள், ரத்தக்கறைப் படிந்த லத்திகள், சிசிடிவி காட்சிகள் என ஆதாரங்களை சேகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவரின் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரின் சித்ரவதைக்குள்ளாகி உயிரிழந்தனர். வியாபாரிகள் மரணத்துக்கு நீதிகேட்டு பொதுமக்கள் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது.

ஜெயராஜ், பென்னிக்ஸ், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்

சாத்தான்குளம் இரட்டைக் கொலை

அரசியல் கட்சிகளும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது. அதனால் சாத்தான்குளம் சம்பவம் விஸ்வரூபம் எடுத்தது. வருவாய் துறை கட்டுப்பாட்டில் காவல் நிலையம் சென்றது. மாவட்ட எஸ்.பி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை இடமாற்றம் செய்யப்பட்டனர். வியாபாரிகள் மரணத்தில் சந்தேகப்பட்ட இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ-க்கள், காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

அதன்பிறகும் பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை. சம்பந்தபட்ட இன்ஸ்பெக்டர், எஸ்ஐ-க்கள், காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஜெயராஜ் குடும்பத்தினரும் பொதுமக்களும் முன்வைத்தனர். இதற்கிடையில் இந்தச் சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தியபோது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நடந்த விவரங்களை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவர் அறிக்கையாக சமர்பித்தார். அந்த அறிக்கை ஓட்டுமொத்த காவலர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

சாத்தான்குளத்தில் சிபிஐ விசாரணை

சிபிசிஐடி vs சிபிஐ

இதற்கிடையில் இந்த வழக்கை தாமாக முன்வந்து மதுரை உயர்நீதிமன்ற கிளை விசாரித்தது. பிரச்னை விஸ்வரூபமானதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என அறிவித்தார். நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்போது சிபிஐ விசாரணை நடத்துவதற்கு முன்பு வரை சிபிசிஐடி விசாரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

சிபிசிஐடி ஐஜி சங்கர் தலைமையிலான குழு சாத்தான்குளத்துக்குச் சென்று அதிரடி ஆக்ஷனில் களமிறங்கியது. ஜெயராஜ் குடும்பத்தினர், பென்னிக்ஸின் நண்பர்கள், சிசிடிவி காட்சிகள், சாத்தான்குளம் காவல் நிலையம், மருத்துவமனை, டாக்டர், சிறைக் காவலர்கள் என ஒருவரையும் விடாமல் விசாரித்தது. சிபிசிஐடியில் போலீசாரின் விசாரணை வளையம் இறுகியதால் சம்பந்தப்பட்ட சாத்தான்குளம் போலீசார் தலைமறைவாகினர்.

நீதிமன்றத்தில் ஆஜராகிய தூத்துக்குடி போலீஸ் அதிகாரிகள்

இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்

உரிய ஆதாரங்கள் கையில் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ-க்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முத்துராஜா, முருகன் என இதுவரை 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரை போலீசார், வாக்கி அலறலோடு நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் செக்போஸ்ட்டில் வைத்து கைது செய்தனர்.

சிபிசிஐடி போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுதல்களைப் பெற்றது. தொடர்ந்து சிபிசிஐடி போலீசாரே விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர். சாத்தான்குளம் வழக்கை சிபிஐ விசாரிக்கும் என அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் டெல்லி சிபிஐ குழு எப்.ஐ.ஆரை பதிவு செய்தது.

காவலர் ரேவதி

டெல்லியிலிருந்து ஒரு குழு சாத்தான்குளத்துக்கு வந்து, சிபிசிஐடி போலீசாரிடமிருந்து வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்றுக் கொண்டது. பின்னர் அவர்களும் சாத்தான்குளத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தினர்.

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் அங்கு பணியாற்றிய காவலர் ரேவதியின் சாட்சியம் அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியது. நீதிமன்றத்திலும் நேரில் ஆஜராகிய ரேவதி, சாட்சி அளித்தார். தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருவதால் ரேவதியிடமும் மீண்டும் விசாரணை நடத்தப்படவுள்ளது.

இதற்கிடையில் சிபிசிஐடி போலீசார் சேகரித்து வைத்திருந்த தடயங்கள், ஆதாரங்கள் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்அடிப்படையில் சிபிஐ நீண்ட அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது.

sathankulam
இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்

3 உள்ளாடைகள்

அதில், 3 உள்ளாடைகள், கைலிகள், ரத்தக்கறைப் படிந்த பெட் ஷிட், லத்திகள், 18 ரத்த மாதிரிகள் என ஒரு பட்டியலே போடப்பட்டுள்ளது. மேலும், சாத்தான்குளத்திலிருந்து ஜெயராஜ், பென்னிக்ஸை தனியார் வாகனத்தில் அழைத்துச் சென்ற டிரைவரிடம் சிபிஐ விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், வண்ணாரப்பேட்டையில் உள்ள விருந்தினர் மாளிகையில் சாட்சிகளிடமும் பென்னிக்ஸ் நண்பர்களிடமும் சிபிஐ விசாரித்து வருகிறது. இதற்கிடையில் இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக கருதப்படும் சிசிடிவி கேமரா பதிவுகள் அழிக்கப்பட்டுள்ளன. அதனால் அதை சைபர் க்ரைம் போலீஸ் உதவியுடன் மீட்டெடுக்கும் நடவடிக்கையிலும் சிபிஐ ஈடுபட்டுள்ளது.

சிசிடிவி

சாத்தான்குளம் காவல் நிலைய சிசிடிவி சிக்கினால் ஜெயராஜ், பென்னிக்ஸ் விசாரணைக்கு முன், விசாரணைக்கு பின் நடந்த முழு தகவல்கள் வெளியில் தெரிந்துவிடும். உண்மையிலேயே ஊரடங்கு விதிகளை மீறியதற்காகத்தான் ஜெயராஜ், பென்னிக்ஸை போலீசார் இந்தளவுக்கு தாக்கினார்களா என்ற கேள்விக்கான பதிலும் அந்த சிசிடிவியில்தான் மறைந்துள்ளது.

இதற்கிடையில் சாத்தான்குளம் சம்பவத்தில் கைதானவர்களை மீண்டும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நடவடிக்கை எடுத்துவருகிறது. சிபிசிஐடி விசாரணையை விட சிபிஐயிடம் இன்னும் கூடுதல் உண்மைகளை சம்பந்தப்பட்டவர்கள் சொல்ல வாய்ப்புள்ளது. அதனால் சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளதால் எதிர்பார்ப்பும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *