பாலிவுட்டின் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பையில் உள்ள வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். எம்.எஸ்.தோனி திரைப்படம் மூலம் பிரபலம் அடைந்த அவரது மரணம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
சுஷாந்த் மரணம் குறித்து மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக சுஷாந்தின் தந்தை கே.கே. சிங், பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள போலீஸ் நிலையத்தில் அண்மையில் ஒரு புகார் அளித்தார்.
அதில் “சுஷாந்திடம் இருந்து ரூ.15 கோடி பணம், பல கோடி மதிப்புள்ள சொத்துகளை நடிகை ரியா சக்கரவர்த்தி பறித்துள்ளார்.
அவரே சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியுள்ளார்” என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இதுதொடர்பாக விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரி தலைமையிலான பிஹார் தனிப்படை போலீஸார் மும்பை சென்றனர். ஆனால் மும்பை போலீஸார் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் நடிகை ரியாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் பிஹார் போலீஸார் குற்றம் சாட்டினர்.

வழக்கு குறித்து பிஹார் காவல் துறை தலைவர் குப்தேஸ்வர் பாண்டே கூறும்போது,”கடந்த 4 ஆண்டுகளில் சுஷாந்தின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.50 கோடி பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.15 கோடி எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த பணம் யாருக்கு கைமாறியது என்பது குறித்த உண்மைகளை கண்டறிய வேண்டும்” என்று தெரிவித்தார்.
நடிகை ரியா மும்பையில் பல்வேறு இடங்களில் சொகுசு வீடுகளை வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே சுஷாந்தின் பணத்தை நடிகை ரியா ஆட்டையை போட்டாரா என்ற கோணத்தில் பிஹார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் மும்பை போலீஸார் முட்டுக்கட்டையாக இருந்துவந்தனர்.

இதைத் தொடர்ந்து வழக்கை சிபிஐ-க்கு மாற்ற பிஹார் முதல் நிதிஷ் குமார் மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார். இதை ஏற்று வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. நடிகர் சுஷாந்த் சிங் பிஹாரை சேர்ந்தவர் என்பதால் அந்த மாநில அரசு வழக்கு விசாரணையில் தீவிரம் காட்டுகிறது.
இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி நடிகை ரியா மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட் முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. போலீஸ் விசாரணைக்கு நடிகை ரியா ஒத்துழைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் சுஷாந்த் சிங் மரணம் குறித்து சிபிஐ நேற்று வழக்கு பதிவு செய்தது. தொழிலதிபர் மல்லையா வழக்கை விசாரித்த சிபிஐ குழுவினர் சுஷாந்த் மரண வழக்கை விசாரிக்க உள்ளனர். சுஷாந்திடம் இருந்து நடிகை ரியா பணத்தை ஆட்டையை போட்டாரா, அவரை தற்கொலைக்கு தூண்டினாரா என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு சிபிஐயின் கிடுக்குப்பிடி விசாரணையில் விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.