சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த திங்கள்கிழமை வெளியானது. இதில் 88.78 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 5.38 சதவீதம் அதிகமாகும். மாணவிகள் 92.15 சதவீதம் பேரும் மாணவர்கள் 86.19 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களைவிட மாணவிகள் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ஒரு சுவாரசிய நிகழ்வு நடைபெற்றுள்ளது.
‘டெல்லி அருகேயுள்ள கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த இரட்டையர்கள் மானசி, மான்யா. இருவரும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்ணை பெற்றுள்ளனர். ஆங்கிலம், கணினி அறிவியலில் தலா 98 மதிப்பெண்களும் இயற்பியல், வேதியியல், உடற்கல்வியில் தலா 95 மதிப்பெண்களும் பெற்றிருக்கிறார்கள்.
உருவத்தில் மானசியும் மான்யாவும் ஒரே மாதிரியாக இருப்பார்கள். இருவரும் மதிப்பெண்களும் ஒரே மாதிரியாக பெற்றிருப்பதால் 2 பேரும் சமூக வலைதளங்களில் பிரபலமாகி வருகின்றனர்.
இரட்டையர்கள் கூறுகையில், படிப்பதில் இருவருக்கும் இடையே கடும் போட்டி இருக்கும். இருவரும் ஒரே மதிப்பெண் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சாதனையை எங்கள் பெற்றோருக்கு சமர்ப்பிக்கிறோம்” என்று தெரிவித்தனர்.