லஷ்மி விலாஸ் வங்கியில் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1926-ம் ஆண்டு தமிழகத்தின் கரூரில் லஷ்மி விலாஸ் வங்கி தொடங்கப்பட்டது. ராமலிங்க செட்டியார் தலைமையில் 7 தொழிலதிபர்கள் இணைந்து இந்த வங்கியை நடத்தினர். 93 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட லஷ்மி விலாஸ் வங்கி பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இதைத் தொடர்ந்து லஷ்மி விலாஸ் வங்கியை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. வங்கியில் பணம் எடுக்க கட்டுப்பாடுகளை விதிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்திடம் அனுமதி கோரியது.
இதை ஏற்று ஒரு மாத காலத்துக்கு பணம் எடுப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்க நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி லஷ்மி விலாஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்தில் ரூ.25,000-க்கு மேல் பணம் எடுக்க முடியாது.
மருத்துவ தேவை, கல்வி, திருமண செலவுக்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று கூடுதலாக பணம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.