செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தின் புதிய கட்டிடத்துக்கு அக்.16-ல் அடிக்கல் நாட்டப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கடந்த ஆண்டு நவம்பரில் செங்கல்பட்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது.
தற்போது செங்கல்பட்டு கோட்டாட்சியர் அலுவலகத்தில் தற்காலிகமாக ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
வேண்பாக்கம் அரசினர் தொழிற்பயிற்சி மைய வளாகத்தில் 65 ஏக்கரில் ஆட்சியர் அலுவலகம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அக். 16-ல் முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
ரூ.119 கோடியே 21 லட்சம் மதிப்பில் 4 மாடியுடன் 3 லட்சம் சதுர அடியில் செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட உள்ளது. நீதிமன்றம், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களும் புதிய கட்டிடத்தில் இடம்பெறும் என்று பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.