ரூ.4,500 டெபாசிட், சூப்பரா வேலை செய்வாள் – பெண்ணின் பேச்சை நம்பி ஏமாந்த ஐடி ஊழியர்

சென்னையில் வீட்டு வேலைக்கு ஆள் தேடிய ஐடி நிறுவன ஊழியரிடம் 4,500 ரூபாய் டெபாசிட் தொகையை பெற்றுக் கொண்ட அமுல் என்ற பெண், தொடர்பு எல்லைக்கு வெளியில் சென்றுவிட்டார்.

சென்னை ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்தவர் அசோக்ராஜ். இவர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், தன்னுடைய வீட்டு வேலைக்கு ஆள் தேடியுள்ளார். இணையதளம் மூலம் மேன்பவர் ஏஜென்ஸியின் நம்பர்களை சேகரித்த அசோக்ராஜ், அவர்களிடம் பேசியுள்ளார். அப்போது ரோஜாமேன்பவரிலிருந்து அமுல் என்ற பெண் பேசியுள்ளார்.

அவரிடம் வீட்டில் என்னென்ன வேலைகளை செய்ய வேண்டும் என்று அசோக்ராஜ் கூறியுள்ளார். அதற்கு அமுல், உங்கள் வீட்டில் வேலை செய்ய சூப்பரா பெண் ஒருவரை அனுப்புகிறேன். அதற்கு முன் டெபாசிட் தொகையாக 4500 ரூபாய் செலுத்த வேண்டும். மேலும் வீட்டு வேலைக்கு வரும் பெண்ணுக்கு மாதம் இவ்வளவு ரூபாய் சம்பளம் என பேசியுள்ளார். வீட்டு வேலைகளை உங்களுக்கு பிடித்தது போல செய்வாள் என்று அமுல் கூறியுள்ளார்.

இதையடுத்து அசோக்ராஜ், 4500 ரூபாயை அமுலின் வங்கி கணக்கிற்கு ஆன் லைன் மூலம் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அமுல் கூறியபடி வீட்டு வேலைக்கு யாரும் வரவில்லை. அதுகுறித்து அமுலுக்கு போன் செய்த அசோக்ராஜ், விவரத்தை கூறியுள்ளார். அதற்கு அமுல், வீட்டு வேலைக்கு வரும் பெண் கொரோனா பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அதனால்தான் வரவில்லை. கட்டாயம் நாளை வந்துவிடுவார் என்று கூறியுள்ளார். அமுல் கூறிய பதிலை அசோக்ராஜ் நம்பியுள்ளார். ஆனால் அமுல் கூறியப்படி வீட்டுக்கு வேலைக்கு மறுநாளும் பெண்வரவில்லை. அதனால் அசோக்ராஜ், மீண்டும் அமுலுக்கு போன் செய்து என்ன வீட்டுக்கு வேலைக்கு ஆள் வருவார்களா, இல்லையென்றால் நான் கொடுத்த டெபாசிட் தொகையை திரும்ப தந்துவிடுங்கள்.

நான் வேற ஏஜென்ஸியை பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு அமுல், சார்.. என்னுடைய மகளை டெலிவரிக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளேன். அதனால் கொஞ்ச நேரம் கழித்து கால் செய்கிறேன் என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளார். ஆனால் அமுல் மீண்டும் அசோக்ராஜிடம் போனில் பேசவில்லை.

அசோக்ராஜ்
அசோக்ராஜ்

அதனால் அசோக்ராஜ் மறுபடியும் அமுலை போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. 10-தடவைக்கு மேல் போன் செய்த அசோக்ராஜின் செல்போனை அமுல் பிளாக் செய்துவிட்டார். அதன்பிறகே அசோக்ராஜ், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். அதன்பிறகு அமுல் குறித்து சில விவரங்களை இணையதளத்தில் தேடினார்.

அப்போது அமுல், தன்னைப் போல சிலரை ஏமாற்றியதாக இணையதளத்தில் பதிவுகள் இருந்தன. இதையடுத்து அசோக்ராஜ், நீலாங்கரை காவல் நிலையத்தில் புகாரளித்தார். ஆனால், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், அடையாறு துணை கமிஷனர் விக்ரமனிடம் அசோக்ராஜ் புகாரளித்தார். உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி நீலாங்கரை போலீஸாருக்கு விக்ரமன் உத்தரவிட்டார். அதன்பேரில் அசோக்ராஜ் புகாருக்கு மனு ஏற்பு சான்றிதழை போலீஸார் கொடுத்தனர்.

புகார் மனு
புகார் மனு

இதுகுறித்து அசோக்ராஜ் கூறுகையில், வீட்டுக்கு வேலைக்காக பெண் ஒருவரை இணையதளம் மூலம் தேடினேன். அப்போது ரோஜா மேன்பவர் சார்பிலிருந்து அமுல் என்பவர் என்னிடம் பேசினார். வேலைக்கு ஆள் அனுப்புவதாகக் கூறிய அமுல் பணத்தை வாங்கிக் கொண்டு என்னை ஏமாற்றிவிட்டார்.

என்னைப் போல பலரை அவர் ஏமாற்றியுள்ளார். 4500 ரூபாய் பணம்தானே என பலர் அமுல் மீது புகாரளிக்கவில்லை. அமுலிடம் விசாரித்தால் அவரால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் தெரியவரும் என்றார்.

நீலாங்கரை போலீஸார் கூறுகையில், அசோக்ராஜ் கொடுத்த புகாரின்பேரில் அமுலை தேடிவருகிறோம். ஆனால் இந்தத் தகவல் வெளியில் தெரிந்துவிட்டதால் அமுல் தரப்பு உஷாராகிவிட்டது. இருப்பினும் அமுலிடம் விசாரித்தபிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அமுலிடம் பணம் கொடுத்தற்கான ஆதாரங்களை அசோக்ராஜ் கொடுத்துள்ளார். பொதுவாக வீட்டு வேலைக்கு அறிமுகம் இல்லாதவர்கள் மூலம் ஆள்களை நியமிப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

வீட்டு வேலைக்கு வரும் பெண்கள் குறித்த முழுவிவரங்களை தெரிந்தபிறகே அவர்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டும். இணையதளத்தில் எந்தவித கட்டுப்பாடுகளின்றி மேன்பவர் என பலர் தங்களின் செல்போன் நம்பர்களை பதிவு செய்துள்ளனர். அவர்கள் குறித்த முழு தகவல்கள் தெரிந்தபிறகே வேலைக்கு சேர்க்க வேண்டும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *