சிறுமி
சென்னை, பெரவள்ளூரில் 14-ம் தேதி 11-வயது சிறுமி ஒருவர், தனியாக நடந்துச் சென்றார். அப்போது ஆட்டோ, சிறுமியின் அருகில் வந்து நின்றது. அதனால் பயந்து போன சிறுமி, தன்னுடைய கோபத்தை முகத்தில் காட்டியப்படி ஆட்டோ டிரைவரை பார்த்தாள். அப்போது அந்தத் தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை.
இந்தச் சமயத்தில் டிரைவர், சிறுமியின் மேல் மயக்க மருந்தை தெளித்துள்ளார். அவர் விலகி கொள்ள அவளின் துப்பட்டாவில் விழுந்துள்ளது. சுதாரித்துக் கொண்ட சிறுமி, அங்கிருந்து தப்பி ஓட முயன்றாள். ஆனால் அதற்குள் டிரைவரின் கைகள் சிறுமியை லகுவாக எட்டிப்பிடித்தது. டிரைவரின் கைக்குகள் சிறுமி சிக்கிக் கொண்டாள்.

தனியொருத்தி
சிறுமி உதவிக்கோரி சத்தம் போட்டாள். பாவம், அந்தச் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. இந்தச் சமயத்தில் சிறுமியை வலுகட்டாயமாக ஆட்டோவுக்குள் ஏற்ற முயன்றான் டிரைவர். சிறுமியோ டிரைவருடன் தனியொருத்தியாக போராடினாள். ஆனால், டிரைவரோ சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க தொடங்கினான்.
அவனிடமிருந்து தப்பிக்க முடியாத சிறுமி, என்னசெய்தென்று தெரியாமல் ஒருகனம் திகைத்தாள். அப்போதுதான் சட்டென்று சிறுமியின் மூளையில் அந்த எண்ணம் தோன்றியது. டிரைவரின் கையை கடித்தாள். அதனால் டிரைவரின் பிடி விலகியதும் சிறுமி தப்பி ஒடினாள். டிரைவர் பின்னால் விரட்டியபோதும் சிறுமி மின்னல் வேகத்தில் தப்பிவிட்டாள்.
இதையடுத்து ஓட்டமும் நடையுமாக வீடு வந்து சேர்ந்த சிறுமி தன்னுடைய அம்மாவிடம் விவரத்தைக் கூறி கதறி அழுதாள். பட்டப்பகலில் அதுவும் ஆள்நடமாட்டம் உள்ள தெருவில் நடந்த இந்தச் சம்பவம் சிறுமியின் அம்மாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இதையடுத்து அவர், பெரம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் திவ்யகுமாரி வழக்கு பதிந்து விசாரித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவின் துணை கமிஷனர் ஜெயலட்சுமி, ஆட்டோ டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து சென்னை திருவிக நகர் திருநாவுக்கரசு தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஹரிபாபு (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர்.
ஆட்டோ டிரைவருடன் போராடிய தைரிய சிறுமியை சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் துணை கமிஷனர் ஜெயலட்சுமி நேரில் சந்தித்து பாராட்டினர். சிறுமியின் வீரத்தை இன்று ஈரோட்டில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி, சிறுமியை பாராட்டினார்.
வாழ்த்துக்கள் தைரிய சிறுமியே!