காதல் திருமணம்; கணவருடன் சண்டை – மகனை கொலை செய்த தாய்

காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண், மகனை அடித்ததைக் கணவர் கண்டித்துள்ளார். அதனால் ஏற்பட்ட தகராறில் மகனைக் கொலை செய்து விட்டு தாயும் தற்கொலை செய்துக் கொண்டார்.

சென்னையை அடுத்த புழல் அருகே உள்ள காவாங்கரை ஜீவா நகரைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (25). இவர், அந்தப்பகுதியில் உள்ள லாரி புக்கிங் அலுவலகத்தில் வேலைப்பார்த்து வருகிறார்.

இவருக்கும் செங்குன்றத்தை அடுத்த சாமியார் மடத்தைச் சேர்ந்தவர் பாக்யலட்சுமிக்கும் (22, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதல் மலர்ந்தது.

பாக்யலட்சுமி, அட்டை கம்பெனியில் வேலைப்பார்த்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்க்கையை தொடங்கினர். இவர்களுக்கு மித்ரன் என்ற ஒன்றரை வயதில் மகன் பிறந்தான்.

பாக்யலட்சுமி
பாக்யலட்சுமி

திருமணத்துக்குப்பிறகு பாக்யலட்சுமி வேலைக்குச் செல்லவில்லை. வீட்டிலிருந்து மகனைக் கவனித்து வந்தார். ரஞ்சித்குமார் மீது பாக்யலட்சுமி அதிகளவில் அன்பு வைத்திருந்தார்.

இந்தச் சூழலில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மித்ரன், சேட்டைப் பண்ணியுள்ளான். அதனால் கோபமடைந்த பாக்யலட்சுமி, மகனை அடித்துள்ளார்.

அதை ரஞ்சித்குமார் கண்டித்துள்ளார். அதன்காரணமாக கணவன் மனைவிக்கு இடையே சாதாரணமாக தொடங்கிய வாய்த்ததகராறு சண்டையில் முடிந்தது. அதன்பிறகு கணவனும் மனைவியும் பேசவில்லை.

வழக்கம்போல நேற்று காலை ரஞ்சித்குமார் வேலைக்குச் சென்றார். வீட்டில் பாக்யலட்சுமியும் மித்ரனும் இருந்தனர். பின்னர் நேற்று மாலையில் பாக்யலட்சுமி, கணவருக்கு போன் செய்து எப்போது வீட்டுக்கு வருவீர்கள் என்று கேட்டுள்ளார்.

அதற்கு ரஞ்சித்குமார் கோபமாக பேசியதாகக் கூறப்படுகிறது. அதனால் மனவேதனையடைந்த பாக்யலட்சுமி, மகனை முதலில் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்துள்ளார். பிறகு அதே கயிற்றில் தானும் தற்கொலை செய்துள்ளார்.

மித்ரன்
மித்ரன்

பாக்யலட்சுமியின் அம்மா சாந்தி, வீட்டுக்கு வந்து கதவைத் தட்டியுள்ளார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து கதவை உடைத்து சாந்தி உள்ளே சென்றார். அப்போது, பேரனும் மகளும் ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இதுகுறித்து தகவலறிந்த புழல் உதவி கமிஷனர் ஸ்ரீகாந்த், இன்ஸ்பெக்டர் வசந்தன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

பாக்யலட்சுமி, மித்ரன் ஆகியோரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆர்டிஓ விசாரணை நடந்து வருகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை, ஆர்டிஓ விசாரணை அறிக்கை ஆகியவை கிடைத்தப்பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *