சென்னை வியாசர்பாடி சுந்தரம் தெருவை சேர்ந்த விநாயகியின் மகன் பிரசாந்த் (22). இவர் கல்லூரி மாணவர். விநாயகி, அவரின் தோழி அம்சா ஆகியோர் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க பிரசாந்த் அம்மாவின் தோழி அம்சாவுடன் பைக்கில் சென்றார்.
அப்போது நள்ளிரவு நேரத்தில் பிரசாந்தை ஒரு கும்பல் வழிமறித்துள்ளது. பின்னர் அந்த கும்பல் அம்சா கண் முன்னாலேயே பிரசாந்தை சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அம்சா கூச்சலிட்டார். அதனால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரசாந்தை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அம்சா சேர்த்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரசாந்த் உயிரிழந்தார்.
இதுகுறித்து வியாபார்பாடி போலீஸார் தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். பிரசாந்துக்கும் அந்த பகுதியை சேர்ந்த ஒரு கும்பலுக்கும் முன்விரோதம் இருந்து வருகிறது. இதனால் பழிக்குப் பழியாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கல்லூரியில் படிக்கும் பிரசாந்த் மீது கொலை வழக்கு உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.