சென்னை: ஏ.என்.பி.ஆர். கேமராக்களில் இரண்டு நாளில் சிக்கிய 11,000 பேர் – வாகன ஓட்டிகளே உஷார்

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நவீன வசதிகளைக் கொண்ட ஏ.என்.பி.ஆர் என்ற கேமராக்கள் முக்கியமான சிக்னல்களில் பொருத்தப்பட்டிருக்கின்றன. கேமரா பொருத்தப்பட்ட இரண்டு நாளிலேயே 11,000 பேர் போக்குவரத்து விதிகளை மீறியவர்களை கேமரா காட்டிக் கொடுத்திருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகளே உஷராக வாகனங்களை ஓட்டிச் செல்லுங்க. இல்லையென்றால் உங்கள் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் வரும் அடுத்து அபராத நோட்டீஸ் வரும்.

நுழைவு வாயில் ஏஎன்பிஆர் கேமராக்கள்

பிற மாநிலங்களிலிருந்து சென்னைக்கு வரும் நுழைவு வாயில்களில் ஒன்றான மாதவரம் ஜிஎன்டி சாலை மற்றும் 100 அடி சாலை சந்திப்பான மாதவரம் ரவுண்டானா ஆகியவற்றில் போக்குவரத்து காவல் துறை சார்பில் நவீன வசதிகளுடன் கூடிய போக்குவரத்து புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. அதோடு போக்குவரத்து விதிகளை மீறுபவர்களைக் கண்காணிக்க 4 ஏஎன்பிஆர் (ANPR) என்ற அதிநவீன கேமராக்கள், 60 சிசிடிவி கேமராக்கள் அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டன. அதை கமிஷனர் சங்கர் ஜிவால் 1.7.2021-ம் தேதி தொடங்கி வைத்தார்.

கமிஷனர் சங்கர் ஜிவால்
கமிஷனர் சங்கர் ஜிவால்

இதையடுத்து சென்னை அண்ணாநகர் போக்குவரத்து காவல் சரகத்துக்குட்பட்ட அண்ணாநகர், திருமங்கலம் போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கியமான சாலை சந்திப்புக்களான அண்ணாநகர் ரவுண்டானா, அண்ணாநகர் காவல் நிலைய ரவுண்டானா, சாந்தி காலனி சந்திப்பு, 100 அடி சாலை மற்றும் எஸ்டேட் சாலை சந்திப்பு, மேற்கு டிப்போ மற்றும் 18 வது சாலை சந்திப்பு ஆகிய 5 இடங்களில் 61 நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டன.

துல்லியமாக படம் பிடிக்கும்

இந்த 5 சிக்னல்களிலும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் வாகன பதிவு எண்களை துல்லியமாக படம் பிடிக்கும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. கேமராக்கள் படம் பிடிப்பதை காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்தே போலீஸார் கண்ககாணித்து போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்தத் திட்டம் மேலும் நவீனப்படுத்தப்பட்டு விதிகளை மீறுபவர்களின் செல்போன் நம்பர்களுக்கு உடனுக்குடன் எஸ்எம்எஸ் அனுப்பும் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த தானியங்கி செலான் அனுப்பும் புதிய நடைமுறையை கமிஷனர் சங்கர் ஜிவால் 1.7.2021-ல் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் (போக்குவரத்து) பிரதீப்குமார், இணை கமிஷனர்கள் லலிதா லஷ்மி, துரைக்குமார், துணை கமிஷனர் பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் கமிஷனர் சங்கர் ஜிவால்
போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் கமிஷனர் சங்கர் ஜிவால்

விதிகளை மீறினால் எஸ்.எம்.எஸ்

இந்த பதிய நடைமுறையால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து சிக்னலில் எல்லைக்கோட்டை தாண்டி வாகனங்கள் நிறுத்தினாலும், சிவப்பு விளக்கு சிக்னல் விழுந்தபிறகு சாலையைக் கடந்தாலும், அதிக வேகத்தில் வாகனத்தில் வந்தாலும் என போக்குவரத்து விதிகளை மீறினால் சம்பந்தப்பட்ட வாகனங்களின் பதிவு நம்பரை ஏஎன்பிஆர் கேமராக்கள் துல்லியமாக படம் பிடித்துவிடும். அடுத்து வாகன ஓட்டிகளின் செல்போன் நம்பருக்கு அபராத செலானும் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும். அடுத்து சம்பந்தப்பட்டவர்களின் வீட்டுக்கு காவல்துறையின் நோட்டீஸ் செல்லும்.

கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்த இந்த புதிய நடைமுறையில் கடந்த இரண்டு நாள்களில் 11,000 பேர் போக்குவரத்து விதிகளை மீறியது ஏஎன்பிஆர் கேமரா மூலம் தெரியவந்திருக்கிறது. அவர்களுக்கு செலான் மற்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. அதனால் மேற்கண்ட சிக்னல்களில் விதிகளை மீறாமல் உஷராக வாகனங்களை ஓட்டிச் செல்லுங்கள். இல்லையென்றால் உங்களின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *