உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும்- சென்னை மாநகராட்சி இன்ஜினீயரின் கொரோனா காதல்

சமூக வலைதளத்தில் ஒரு காதல் ஆடியோ வைரலாகி வருகிறது. அந்த ஆடியோ குறித்து விசாரித்தபோது அது சென்னையில் கொரோனா பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவி ஒருவருடன், மாநகராட்சி இன்ஜினீயர் பேசிய உரையாடல் ஆடியோ என்பது தெரியவந்துள்ளது.


கொரோனா என்ற ஒற்றை வார்த்தைக்கு இன்று உலகமே நடுநடுங்கிக் கொண்டிருக்கிறது. கொரோனா தடுப்புப் பணிகள் முழுவீச்சில் அரசு இயந்திரம் செயல்பட்டு வருகிறது.


இந்த நிலையில், சென்னையில் அதிகமாக கொரோனா பாதித்த இடங்களில் ஒன்றான ராயபுரம் மண்டலத்தில் கொரோனா தடுப்புப் பணியில் கல்லூரி மாணவிகள், தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


ராயபுரம், மண்ணடி தம்பு செட்டி தெருவில் பகுதியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கல்லூரி மாணவி ஒருவருக்கு, அதேபகுதியில் மாநகராட்சி உதவி இன்ஜினீயர் ஒருவர் காதல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.


கல்லூரி மாணவியை அழகாக இருப்பதாகவும் அவரது டிக் டாக் வீடியோக்களை பார்த்து ரசித்ததாகவும் புகழ்ந்த அந்த அதிகாரி, 2 ஆண்டுகளுக்கு முன்பு உன்னை பார்த்திருந்தால் என்னுடைய மனைவி ஆகியிருப்பாய் என காதலில் உருகும் ஆடியோ வெளியாகி உள்ளது.


பிடி கொடுக்காமல் பேசும் அந்த மாணவியிடம், தான் யார் தெரியுமா? மாநகராட்சி ஏ.இ என்றால் போலீஸ் ஏ.சி மாதிரி என்றும், தான் மாதம் 78 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும் பெருமை பேசிய அந்த அதிகாரி, அப்படி என்றால் நீ எப்படி இருக்கலாம் நினைத்துக் கொள் என ஆசைவார்த்தை கூறி வலை விரித்துள்ளார்.

மேலும் நீ ரொம்ப ரொம்ப அழகாய் இருக்கிறாய், உன்னை எனக்குப் பிடிக்கும் என்று மாநகராட்சி இன்ஜீனியர் கூறுகிறார். அதற்கு அந்த மாணவி, அலுவலகத்தில் என்னை எல்லோருக்கும் பிடிக்கும் என்று நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று கேள்வி எழுப்புகிறார்.


ஆனால் விடாமல் அந்த இன்ஜினீயர் மாணவியின் அழகை வர்ணிக்கிறார். அதற்கு மாணவியோ, சார் கலாய்க்காதீங்க என்று தப்பிக்க பார்க்கிறார். இருப்பினும் இன்ஜீனியர் விடவில்லை. அதன்பிறகு சார் வீட்டில் எல்லோரும் இருக்கிறார்கள் என்று கூறி இணைப்பு துண்டிக்கிறார் மாணவி.


இந்த சம்பவம் குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஜெயலட்சுமியிடம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி புகார் அளித்துள்ளார். அப்போது ஆடியோவையும் ஆதாரமாக கொடுத்துள்ளார்.


அதன்அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் பிரகாஷுக்கு தகவல் சென்றுள்ளது. அவரும் துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *