சென்னையில் மூன்று மகன்கள் இருந்தும் பட்டினி – சீனியர் சிட்டிசன் தம்பதி தற்கொலை

சென்னையில் கொரோனா ஊரடங்கால் வேலையை இழந்த சீனியர் சிட்டிசன் பட்டினி கிடந்துள்ளனர். அதனால் அவர்கள் தற்கொலை கடிதம் எழுதி விட்டு தூக்குப்போட்டுக்கொண்டனர்.

சென்னை பெரம்பூரில் வசித்துவந்தவர் குணசேகரன் (65). தச்சுத்தொழிலாளி. இவரின் மனைவி செல்வி (63). இந்தத் தம்பதியினருக்கு 3 மகன்கள். கொரோனா ஊரடங்கால் வேலை இல்லாமல் குணசேகரன் வீட்டிலேயே இருந்துள்ளார். அதனால் வருமானமின்றி அவரின் குடும்பம் தவித்தது. அதனால் வாட்ச்மேன் வேலைக்கு சென்று வந்தார்.

சடலமாக குணசேகரன், செல்வி

இந்தத் தம்பதியினரின் 2 மகன்களுக்கு திருமணமாகிவிட்டது. அவர்கள் மனைவிகளுடன் தனிக்குடித்தனம் சென்று விட்டனர். மூன்றாவது மகன் ஸ்ரீதருக்கு இன்னும் திருமணமாகவில்லை. அதனால் அவர் மட்டும் பெற்றோருடன் வசித்தார்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஸ்ரீதர், வேலைக்கு செல்லாமல் ஊரைச் சுற்றிவந்தார். சாப்பிடக் கூட வழியில்லாமல் தவித்த அப்பா, அம்மாவிடம் மது குடிக்க பணம் கேட்டு ஸ்ரீதர் தகராறு செய்து வந்துள்ளார். பணம் கொடுக்கவில்லை என்றால் அப்பா, அம்மாவை அடித்து உதைத்துள்ளார்.

செக்யூரிட்டி வேலையும் குணசேகரனுக்கு பறிபோனது. அதனால் குணசேகரனும் செல்வியும் சாப்பாட்டுக்குகூட வழியில்லாமல் பட்டினியாக கிடந்தனர். தங்களின் சூழ்நிலையை மகன்களிடம் கூறியும் யாரும் உதவ முன்வரவில்லை. அதனால், பசி பட்டினியால் சிரமப்பட்ட கணவனும் மனைவியும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

பின்னர் இருவரும் சேர்ந்து தற்கொலைக் கடிதம் ஒன்றை எழுதினர். அதில், “எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எங்கள் உடலை காவல்துறையினர்தான் அடக்கம் செய்யவேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

மாலையுடன் போலீஸ்

இன்று காலை நீண்ட நேரமாகியும் குணசேகரனின் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. அதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டிப்பார்த்தனர். பின்னர் செம்பியம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உதவி கமிஷனர் சுரேந்தர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, குணசேகரன், செல்வி ஆகியோர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தனர்.

இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் குணசேகரனின் மகன்களிடம் செம்பியம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் அம்மா, அப்பாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த தங்களை அனுமதிக்க வேண்டும். அவர்கள் அநாதை இல்லை என்று தெரிவித்தனர். இதையடுத்து குணசேகரன், செல்விக்கு இறுதி அஞ்சலி செலுத்த போலீசார் அனுமதித்தனர்.

இருப்பினும் வயதான தம்பதியினரின் கடைசி ஆசையை நிறைவேற்ற உதவிக்கமிஷனர் சுரேந்தர் தலைமையிலான போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் இருவரின் சடலங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பிறகு குணசேகரின் மகன்கள், உறவினர்கள் இறுதி சடங்கு செய்தனர்.

ஒரே நேரத்தில் வறுமை காரணமாக கணவன், மனைவி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *