வீட்டு வேலை பார்த்து வந்த இளம் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் டாக்டர், அவரின் உறவினரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் லட்சுமி நகரை பகுதியை சேர்ந்தவர் நதியா (பெயர் மாற்றம்). 27 வயதாகும் இவர், தாம்பரம் சி.டி.ஒ காலணியை சேர்ந்த டாக்டர் தீபக் (28) என்பவரின் வீட்டில் வேலை செய்து வந்துள்ளார்.
வழக்கம்போல் வேலைக்கு இன்று காலை வேலைக்குச் சென்றார் நதியா. அப்போது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த நதியாவிடம் டாக்டர் தீபக், அவரின் உறவினர் ஆனந்த் (34) ஆகியோர் சேர்ந்து பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு நதியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நதியாவுக்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து ஆவேசமடைந்த நதியா, உங்களைப் பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுப்பேன் என்று கூறிவிட்டு வெளியில் வந்துள்ளார். அவரை வழிமறித்த டாக்டர் தீபக் மற்றும் அவரின் உறவினர் ஆனந்த், வீட்டுக்குள் நடந்த தகவலை வெளியில் கூறினால், நகைகளைத் திருடியதாக உன் மீது நாங்கள் காவல் நிலையத்தில் புகாரளிப்போம் என்று மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது. அதனால் நதியா, அங்கிருந்து அழுதப்படியே வீட்டுக்கு வந்தார்.
இதையடுத்து வீட்டில் உள்ளவர்கள் நதியாவிடம் என்ன நடந்தது என்று விசாரித்துள்ளனர். அப்போது நதியா கூறியதைக் கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் நதியாவை அழைத்துக் கொண்டு தாம்பரம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். தாம்பரம் போலீஸார் டாக்டர் தீபக், ஆனந்த் ஆகியோரிடம் நதியா புகார் தொடர்பாக விசாரித்தனர். அதன்பிறகு டாக்டர் தீபக், ஆனந்த் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “டாக்டர் தீபக்கின் குடும்பத்தினரும் டாக்டர்களாக உள்ளனர். வசதியான குடும்பத்தைச் சேர்ந்த தீபக் மீது நதியா புகாரளித்தால் நடவடிக்கை எடுத்திருக்கிறோம். மேலும், நதியாவிடம் பெண் போலீஸார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட டாக்டர் தீபக் அவரின் உறவினர் ஆனந்த் ஆகியோரிடம் விசாரித்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறோம்” என்றனர்.
டாக்டர் வீட்டுக்குச் சென்று விளக்கம் கேட்டபோது அவர்கள் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. மேலும் வீட்டை பூட்டிவிட்டு உள்ளேயே இருந்துக் கொண்டனர். டாக்டர் தீபக் தரப்பில் விளக்கம் கொடுத்தால் அதை பரிசீலிக்க தயாராக இருக்கிறோம்.
காவல் நிலையத்திலிருந்த நதியாவிடம் என்ன நடந்தது என்று கேட்டதற்கு, வீட்டுக்குள் எனக்கு நடந்த கொடுமையை காவல் நிலையத்தில் புகாராக கொடுத்திருக்கிறேன் என்று சுருக்கமாக கூறி விட்டு சென்று விட்டார்.
வீட்டு வேலைக்கு வந்த இளம்பெண்ணிடம் டாக்டரும் அவரின் உறவினரும் அத்துமீறியதாக எழுந்த குற்றச்சாட்டு தாம்பரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.