சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி விடுதியின் மாடியிலிருந்து டாக்டர் கண்ணன் (24) குதித்து தற்கொலை கொண்டார். இதுகுறித்து ஏழுகிணறு போலீசார், விசாரணை நடத்திவருகின்றனர். டாக்டர் கண்ணன் மரணத்துக்கு டாக்டர்கள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்தது.
டாக்டர் கண்ணனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் முதல்வர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக போலீஸாரும் டாக்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, டாக்டரின் கண்ணனின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்யும் போது அதை வீடியோ எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை உறவினர்கள் முன்வைத்தனர். அதற்கு ஏற்பாடு செய்வதாக போலீஸார் உறுதியளித்தனர்.
போலீசார் கூறுகையில், “திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரின் மனைவி முத்துலட்சுமி. இவர்களின் மகன் டாக்டர் கண்ணன். கடந்த ஜூன் மாதம் ஸ்டான்லி மருத்துவமனையில் ஆர்த்தோ பிரிவில் முதுகலை மாணவனாக கண்ணன் சேர்ந்துள்ளார்.
கடந்த 19-ம் தேதி இரவு பணியை முடித்துவிட்டு அவர் தங்கியிருக்கும் விடுதிக்கு வந்துள்ளார். வழக்கம்போல பெற்றோரிடம் செல்போனில் கண்ணன் பேசியுள்ளார். பின்னர் கண்ணனுக்கு நிச்சயம் செய்த பெண்ணுடன் அவர் பேசியுள்ளார்.

அதன்பிறகு அவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. தற்போது டாக்டர் கண்ணனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். அதுதொடர்பாக விசாரித்துவருகிறோம் என்றனர்.
டாக்டர் கண்ணனின் அப்பா முருகேசன் “என்னுடைய மகன் நன்றாக படிப்பான். ஆசைப்பட்டு அவன் டாக்டராகினான். அவனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தோம். இந்தச் சமயத்தில்தான் மேல்படிப்பு படிக்க ஸ்டான்லி மருத்துவமனையில் இடம் கிடைத்தது. திருமணகோலத்தில் மகனைப் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டேன்” என்றவரால் தொடர்ந்து பேச முடியவில்லை.

தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் தாமோதரன் யாதவ் கூறுகையில், “முதுகலை மருத்துவ மாணவன் கண்ணன் மரணத்தில் மர்மம் இருக்கிறது. அவர் நல்ல மனநிலையில்தான் இருந்தார். தற்கொலை செய்துகொள்ள எந்தக் காரணமும் இல்லை.
ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் சிலர் மீது எங்களுக்கு சந்தேகம் உள்ளது. நீதி கிடைக்கும் வரை போராடுவோம். டாக்டர் கண்ணனை இழந்து வாடும் பெற்றோருக்கு அரசு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” என்றார்.