சென்னை வண்டலூரில் தனியாக வசித்த ஓய்வு பெற்ற ஊழியர், அவரின் மனைவி ஆகியோரை மர்ம நபர்கள் கொலை செய்து தண்ணீர் தொட்டிக்குள் வீசி சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. மேலும் இருவரின் செல்போன்களையும் ஆங்காங்கே வீசி விட்டு சென்ற கொலையாளிகளை போலீஸார் தேடிவருகின்றனர்.
சென்னையை அடுத்த வண்டலூர் கொளப்பாக்கம், அண்ணாநகர், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சாம்சன் தினகரன். 63 வயதாகும் இவர், முகப்பேரில் உள்ள குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றி கடந்த 2015-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி ஆலீஸ். ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இந்தத் தம்பதியினருக்கு பெனிட்டா என்ற மகளும் இம்மானுவேல் என்ற மகனும் உள்ளனர். ஆலீஸிக்கும் சாம்சன் தினகரனுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அதனால் கடந்த 2004-ம் ஆண்டு இருவரும் விவகாரத்து பெற்று தனித்தனியாக வசித்து வந்தனர். அதன்பிறகு ஜென்ட் என்பவரை சாம்சன் தினகரன் பதிவு திருமணம் செய்து வண்டலூர் கொளபாக்கத்தில் வசித்து வந்தார். அதன்பிறகு சாம்சன் தினகரன், ஜென்ட் ஆகியோர் ஆலீஸ் குடும்பத்தினருடன் பேசி பழகி வந்தனர். பெனிட்டாவின் திருமணத்துக்கும் அவர்கள் சென்றனர். தற்போது பெனிட்டா, தன்னுடைய கணவர் மற்றும் அம்மா, தம்பி ஆகியோருடன் கூடுவாஞ்சேரி, நந்திவரத்தில் வசித்து வருகிறார். கடந்த 17-ம் தேதி ஜென்ட்டின் தங்கை பிரேமாவின் மகள் ஸ்விட்டி என்கிற பிரிசில்லா, ஜெனட்டுக்கு போன் செய்திருக்கிறாள். ஆனால் அவள் போனை எடுக்கவில்லை. அதன்பிறகு சித்தப்பாவான சாம்சனுக்கு போன் செய்துள்ளார். அவரின் போனை இன்னொருவர் எடுத்து பேசியிருக்கிறார். அவரிடம் சித்தப்பா போன் எப்படி உங்களிடம் இருக்கிறது என பிரிசில்லா கேட்டதும் பெட்ரோல் பங்க் அருகில் கிடந்ததாக கூறியிருக்கிறார்.
இதையடுத்து பிரிசில்லா, பெனிட்டாவுக்கு போன் செய்து விவரத்தை கூறியிருக்கிறாள். அதன்பிறகுதான் பெனிட்டாவும் அவரின் குடும்பத்தினரும் கொளப்பாக்கத்துக்கு வந்து பார்த்திருக்கின்றனர். அப்போது சாம்சனுக்கு சொந்தமான இன்னொரு வீட்டில் உள்ள ஒரு அறையில் ரத்தம் உறைந்து காணப்பட்டது. அதைப் போல வீட்டின் உள்ள தண்ணீர் தொட்டி அருகிலும் ரத்தம் துளிகள் கிடந்தன. அதனால் சந்தேகத்தின்பேரில் தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்தபோது உள்ளே கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஜென்ட்டும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சாம்சன் தினகரனும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். பின்னர் ஒட்டேரி காவல் நிலையத்துக்கு பெனிட்டா தகவல் தெரிவித்ததும் சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்தனர்.அதன்பிறகு மறைமலைநகர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு இரண்டு சடலங்களும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வீட்டிலிருந்த நகைகள், பணம், சொத்து பத்திரங்கள் திருட்டுப் போகவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அப்படியிருக்கும்போது எதற்காக இந்தக் கொலை நடந்தது என ஓட்டேரி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இருவரின் செல்போன் அழைப்புகளை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். அதோடு சிசிடிவி கேமரா பதிவுகள் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. இந்தக் கொலை வழக்கை விசாரித்த 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனியாக வசித்த தம்பதியினர் கொலை செய்யப்பட்டு தண்ணீர் தொட்டிக்குள் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.