சென்னையில் திருடச் சென்ற இடத்தில் தூங்கிய இன்ஜினீயர் – ப்ளாஸ்பேக்கை கேட்டால் வருத்தப்படுவீங்க

சென்னையில் தொழிலதிபர் வீட்டில் திருடச் சென்ற இன்ஜினீயர், போதையில் பூட்டை உடைக்க முடியாமல் மொட்டை மாடியிலேயே தூங்கியுள்ளார்.

தொழிலதிபர்

சென்னை மதுரவாயலை அடுத்த அடையாளம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (53). தொழிலதிபர். இவரின் வீட்டில் தண்ணீர் வரவில்லை. அதனால் அதைச் சரி செய்ய பிளம்பரை வீட்டுக்கு பிரபாகரன் வரவழைத்தார்.

தண்ணீர் குழாய்களை சரிபார்த்த பிளம்பர், மாடிக்குச் சென்று தண்ணீர் தொட்டியைப் பார்க்க வேண்டும் என பிரபாகரனிடம் கூறியுள்ளார். உடனே பிளம்பரும் பிரபாகரனும் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்றனர்.

அப்போது தண்ணீர் தொட்டியின் அருகில் இளைஞர் ஒருவர் தூங்கிக் கொண்டிருப்பதை பிரபாகரன் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

அந்த இளைஞரைப் பிடிக்க பிரபாகரனும் பிளம்பரும் முயற்சி செய்தனர். ஆனால் இருவரின் சத்தம் கேட்ட இளைஞர், அங்கிருந்து தப்பி மாடிப்படி வழியாக கீழே இறங்கி ஓடினார். அவரை பிரபாகரனும் பிளம்பரும் திருடன் திருடன் என சத்தம் போட்டப்படியே விரட்டினர்.

இன்ஜினீயர்

வீட்டின் முன்பக்க கதவு பூட்டி இருந்ததால் இளைஞரால் தப்பி ஓட முடியவில்லை. வீட்டுக்குள் வசமாக சிக்கிக் கொண்ட இளைஞரை பிரபாகரனும் பிளம்பரும் சேர்ந்து மடக்கிப்பிடித்தனர். அவரிடம் விசாரித்த போது இளைஞர், திருட வந்த தகவல் தெரியவந்தது.

இன்ஜினீயர் முத்தழகன்
இன்ஜினீயர் முத்தழகன்

அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பிரபாகரன், மதுரவாயல் காவல் நிலையத்துக்கு போனில் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் போலீசார் வந்தனர். பின்னர் இளைஞரிடம் விசாரித்தனர்.

விசாரணையில் அவரின் பெயர் முத்தழகன் (23), கொளத்தூரைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. இன்ஜினீயரிங் படித்த முத்தழகனுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கவில்லை.

கடன்

அதனால் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். அதுவும் கொரோனா ஊரடங்கில் பறிப்போனது.

இன்ஜினீயரிங் படிக்க வாங்கிய கடன், சகோதரிகளின் திருமணத்துக்கு வாங்கிய கடன், குடும்பச் செலவு ஆகியவை முத்தழகனுக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வந்தது.

அதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த முத்தழகன், மதுபோதைக்கு அடிமையானார்.

இந்தச் சமயத்தில்தான் கடனை அடைக்க வேறுவழியின்றி திருட முடிவெடுத்தார். உணவு டெலிவரி செய்ய மதுரவாயல் பகுதிக்குச் சென்றபோதுதான் தனியாக இருந்த இந்த வீட்டை முத்தழகன் பார்த்துள்ளார்.

பயத்தைப் போக்க மது

வீடு பிரமாண்டமாகவும் தனியாக இருந்ததால் எளிதில் திருடலாம் என சம்பவத்தன்று பைக்கில் முத்தழகன் வந்துள்ளார். முதல் திருட்டு என்பதால் அவருக்கு கை, கால்கள் உதறியுள்ளது.

அதனால் அந்தப் பயத்தைப் போக்க மது அருந்தியுள்ளார். சரக்கு கொஞ்சம் அதிகம் உள்ளே போனதால் தள்ளாடியபடியே பிரபாகரன் வீட்டுக்குள் சுவரி ஏறி குதித்துள்ளார்.

இன்ஜினீயர் முத்தழகன்
இன்ஜினீயர் முத்தழகன்

பூட்டை உடைக்க கையில் நட்டுக்களை கழற்றப் பயன்படுத்தும் ஸ்பேனர், கட்டிங் பிளேடு ஆகியவற்றை கொண்டு சென்றுள்ளார். போதையில் இருந்த முத்தழகன், வீட்டின் பூட்டை உடைத்துள்ளார்.

சரியான ஆயுதம் அனுபவம் இல்லாததால் பூட்டை உடைக்க முடியவில்லை. அதனால் போதை மயக்கத்தில் வீட்டின் மொட்டை மாடியிலிருந்த தண்ணீர் தொட்டிக்கு அருகே படுத்து உறங்கியுள்ளார்.

காலையில் வெயில் தன்மீது பட்டப்பிறகே கண்விழித்த முத்தழகன், வீட்டில் ஆள்நடமாட்டம் இருந்ததால் அங்கேயே பதுங்கிக் கொண்டார். இரவு வரை காத்திருந்துவிட்டு தப்பிச் சென்றுவிடலாம் என பட்டினியாகவே அங்கேயே இருந்துள்ளார்.

இந்தச் சமயத்தில்தான் வீட்டின் உரிமையாளர் பிளம்பருடன் மொட்டை மாடிக்கு வந்தபோது முத்தழகன் மாட்டிக்கொண்டார். இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார், சிறையில் அடைத்தனர்.

காமெடி

திருடச் சென்ற இடத்தில் தூங்கிய இன்ஜினீயர் என்ற தகவல் படிப்பவர்களுக்கு காமெடியாக இருந்தாலும் இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள வறுமையை சமூகம் பார்க்க வேண்டும்.

கொரோனா ஊரடங்கில் வேலை இல்லை, படிப்புக்காக வாங்கிய கடன் ஆகிய நெருக்கடியால் இன்ஜினீயர் திருட முயன்றுள்ளார்.

முதல் திருட்டிலேயே சிக்கிக் கொண்ட முத்தழகன், சார் என்னை விட்டுவிடுங்க, நான்தான் எதுவுமே திருட வில்லை என்று காவல் நிலையத்தில் அப்பாவியாக கேட்டுள்ளார்.

ஆனால் அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று போலீஸார் கூறி, சட்டப்படி முத்தழகன் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *