நான் அவன் இல்லை சென்னை இன்ஜினீயர் சிக்கியது எப்படி

சென்னை திருமுல்லைவாயலைச் சேர்ந்தவர், ராகேஷ் சர்மா (36) இன்ஜினீயரிங் படித்த இவர் கத்தாரில் 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை வேலைபார்த்து வந்துள்ளார். ஜீனியர் அளவிலான சர்வேத கபடி போட்டியில் பங்கேற்றுள்ளார். இவரின் தந்தை முன்னாள் ராணுவ வீரர். கத்தாரிலிருந்து சென்னை வந்த ராகேஷ் சர்மாவுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். ராகேஷிக்கு 3 மாதத்தில் குழந்தை உள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் கணவன் மனைவிக்கு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்துவருகின்றனர்.

இதற்கிடையில் ராகேஷ் சர்மாவுக்கு ஆன்லைனில் கேம் விளையாடுவது ரொம்ப பிடிக்கும். அதனால் வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை ஆன் லைன் கேமில் இழந்துள்ளார். பணமும் இல்லை, மனைவியும் இல்லை என்பதால் என்ன செய்வதென்று அவர் யோசித்துள்ளார். அப்போதுதான் அவர் நான் அவன் இல்லை என்ற படத்தைப் பார்த்துள்ளார். அந்தப்படத்தின் கதை, ராகேஷிக்கு பிடித்துள்ளது. அதனால் அந்தப் படத்தை தொடர்ந்து பல தடவை பார்த்துள்ளார். அந்தப்படத்தின் கதாநாயகனைப் போலவே ராகேஷ், தன்னுடைய சிகை அலங்காரத்தை மாற்றியுள்ளார். பின்னர் அந்தப் படத்தின் வரும் காட்சிகளை நிஜமாக்கியுள்ளார்.

  ராகேஷ் சர்மா
ராகேஷ் சர்மா

இதற்காக அவர், திருமண இணையதளத்தில் போட்டோ, பயோ டேட்டாக்களை பதிவு செய்துள்ளார். அதில் தன்னுடைய தந்தையை முன்னாள் ராணுவ வீரர் என்றும் தன்னை விஞ்ஞானி என்றும் பதிவு செய்துள்ளார். மேலும், தனக்கு நல்ல குணமான மனைவி வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதைப்பார்த்து ஏராளமான பெண்கள் ராகேஷிடம் போனில் பேசியுள்ளனர். அவர்களிடம் கணவரை இழந்தவர்கள், தனிமையாக வாழும் பெண்களுக்கு திருமண ஆசையைக் கூறி அவர்களை தன்னுடைய வலையில் வீழ்த்தியுள்ளார்.

இந்தச் சமயத்தில்தான் கொடுங்கையூரைச் சேர்ந்த எக்ஸ்ஆர்மி ஒருவருடைய மகள், ராகேஷ் சர்மாவை போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ராகேஷ் சர்மாவின் பேச்சில் மயங்கிய அந்தப் பெண், கொஞ்சம் கொஞ்சமாக பணம், நகைகளை அவருக்கு கொடுத்து உதவி செய்துள்ளார். இதுவரை 20 சவரன் தங்க நகைகள், 5.5. லட்சம் ரூபாய் ஆகியவற்றை இழந்த அந்தப் பெண்ணிடம் மேலும் எனக்கு பணம் வேண்டும் என்று ராகேஷ் கேட்டுள்ளார். அதனால் சந்தேகமடைந்த அந்தப் பெண், விவரத்தை தன்னுடைய தந்தையிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து கொடுங்கையூர் காவல் நிலையத்தில் இளம்பெண்ணின் தந்தை புகாரளித்தார். இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ் வழக்கை பதிவு செய்து விசாரித்தார். இந்தத் தகவல் புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா, உதவி கமிஷனர் கோ.ஹரிகுமார் ஆகியோர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக ராகேஷ் சர்மாவைப் பிடிக்க போலீஸார் வியூகம் அமைத்தனர்.

இந்தச் சமயத்தில் கொரோனா ஊரடங்கால் வங்கிக்கு சென்று பணத்தை எடுக்க முடியவில்லை. அதனால் அவசரமாக ஆராய்ச்சிக்கு 10,000 ரூபாய் தேவைப்படுகிறது. எனவே பணம் வேண்டும் என எக்ஸ்ஆர்மியின் மகளிடம் ராகேஷ் போனில் தெரிவித்தார். இந்தத் தகவலை அவர் போலீஸாரிடம் கூறினார்.

  ராகேஷ் சர்மா
ராகேஷ் சர்மா

உடனடியாக அந்தப் பெண் மூலம் ராகேஷ் சர்மாவைப் பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர். உடனே ராகேஷிடம் அந்தப் பெண், நீங்கள் மாதவரம் ரவுண்டானா அருகே வந்தால் பணத்துடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். அதை நம்பிய ராகேஷ், பைக்கில் மாதவரம் ரவுண்டானாவுக்கு வந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீஸார் அந்தப் பெண் ராகேஷிடம் பணம் கொடுப்பதை வீடியோவாக முதலில் பதிவு செய்தனர்.

பணத்தை வாங்கிக் கொண்டு புறப்பட தயாரான ராகேஷை போலீஸார் மடக்கிப்பிடித்தனர். அவரிடம் விசாரித்த போது, கொடுங்கையூர் பெண்ணை மட்டுமல்லாமல் 20-க்கும் மேற்பட்ட பெண்களிடம் நகை, பணத்தை வாங்கியுள்ளதாகக் கூறியுள்ளார். சென்னையில் மட்டுமல்லாமல் வெளி நாடுகளில் வசித்த பெண்களும் ராகேஷ்சர்மானவின் திருமண வலையில் வீழ்ந்து நகை, பணத்தை இழந்த தகவல் தெரியவந்துள்ளது. ராகேஷ் சர்மாவிடமிருந்து விலை உயர்ந்த பைக், கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ராகேஷ் சர்மாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *