புதிய மின் இணைப்பு பெறுவது தொடர்பான மின் வாரியத்தின் உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
கோவை நுகர்வோர் அமைப்பின் சார்பில் கதிர்மதியோன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
“அரசு, தனியார் நிலங்களில் அரசு அனுமதியின்றி கட்டிட பணிகள் மேற்கொள்வதை தடுக்க அந்த கட்டிடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர், கழிவுநீர் இணைப்புகள் வழங்கக்கூடாது என்று கடந்த 2018-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.
இதன்தொடர்ச்சியாக தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கடந்த 2018-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது. இதன்படி புதிய கட்டிடங்களுக்கு மின் இணைப்பு பெற கட்டிடப் பமிகள் முடிப்பு சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது. ஆனால் திடீரென இந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது.
புதிய கட்டிடங்களுக்கு மின் இணைப்பு பெற கட்டிட பணிகள் முடிப்பு சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவை மீண்டும் அமல்படுத்த வேண்டும்” என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதிகள் பார்த்திபன், சுவாமிநாதன் விசாரித்தது. பழைய உத்தரவை வாபஸ் பெற்று பிறப்பிக்கப்பட்ட புதிய உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது.