மொழிகளுக்கு முக்கியத்துவம் அளித்து மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தக்கூடாது என்று சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடந்த 2014-ம் ஆண்டில் மத்திய அமைச்சராக பணியாற்றினார். அப்போது அவரது காரில் வெடிகுண்டு வைக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழ்நாடு விடுதலை படையை சேர்ந்த கலைலிங்கம் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி சிறையில் உள்ள கலைலிங்கம் ஜாமீன் கோரி புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை எதிர்த்து கலைலிங்கம் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
ஆனால் ஐகோர்ட் நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வு, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. அ்பபோது நீதிபதிகள் சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தனர்.
இனம், பிரதேசம், மதம், பிரிவினைவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் இளைஞர்களை போராடச் செய்கின்றனர். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத அவர்கள், மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
தமிழ் கலாச்சாரம், தமிழ் மொழி, தமிழ் இனம் என்ற ஆயுதங்களுடன் பல அமைப்புள் உள்ளன. நமது நாடு பல்வேறு மொழிகள், இனங்கள், மதங்கள், கலாச்சாரங்களை கொண்டது.
இவை அனைத்தும் பாதுகாக்கப்படுகிறது என்ற எண்ணத்தை அரசு மக்களிடம் உருவாக்க வேண்டும். குறிப்பிட்ட மொழிக்கு மட்டும் அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது என்ற எண்ணம் மக்களிடையே உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தக்கூடாது” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.