சென்னை மாநகராட்சி உதவி இன்ஜினீயரின் எப்ஐஆரை ரத்து செய்த ஐகோர்ட்

சென்னை மாநகராட்சி உதவி இன்ஜினீயர் கமலகண்ணன், கொரோனா தடுப்பு பணியில் தன்னார்வலராக பணியாற்றிய கல்லூரி மாணவியிடம் போனில் பேசிய ஆடியோ வெளியானதையடுத்து அவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதோடு அவர் மீது எஸ்பிளனேடு அனைத்துமகளிர் போலீஸார் இந்திய தண்டனை சட்டம் 354 ஏ மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்தனர். சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், உதவி இன்ஜினீயர் கமலகண்ணனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

இந்தநிலையில் கல்லூரி மாணவி, பெண்கள் மற்றும் குழந்தைகள் தடுப்பு பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமியை நேரில் சந்தித்தார். அப்போது அவர் கொடுத்த மனுவில், “ இன்ஜினீயர் கமலகண்ணன் மிகவும் நல்லவர், என் மீது அக்கறை கொண்ட மனிதர். எனக்கு படிப்பு சம்பந்தமான நல்ல ஆலோசனைகளையும் எதிர்கால வாழ்க்கை குறித்த ஆலோசனைகளையும் சொல்லி வழிகாட்டியாக இருப்பவர். என்னிடம் அவர் ஒருபோதும் தவறாகப் பழகியதில்லை. அவர் எனக்கு ஒரு நல்ல ஆண் நண்பராவார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து துணை கமிஷனர் ஜெயலட்சுமி, கல்லூரி மாணவியிடம், காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தை அணுகுங்கள் என்று கூறினார். இந்தச் சூழலில் உதவி இன்ஜினீயர் கமலகண்ணன் தன் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்யும்படி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

மனுதரர் தரப்பில் வழக்கறிஞர் முத்தமிழ்செல்வகுமார் ஆஜராகி வாதாடினார். மாணவி தரப்பில் வழக்கறிஞர் ஆறுமுகம் ஆஜராகினார். இந்த வழக்கு விசாரணை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்தது. சம்பந்தப்பட்ட மாணவி, உதவி இன்ஜினீயர் பங்கேற்றனர். வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், உதவி இன்ஜினீயர் மீதான புகாரின் முகாந்திரம் இல்லை. அதனால் எப்ஐஆரை ரத்து செய்யப்படுகிறது. மேலும் மனுதாரர் கமலகண்ணன் தலைமை நீதிபதி கொரோனா நிவாரண நிதிக்கு 10,000 ரூபாயை செலுத்தும்படி தெரிவித்தார்.

இதுகுறித்து வழக்கறிஞர் முத்தமிழ் செல்வக்குமார் கூறுகையில், “வழக்கு விசாரணையின்போது நீதிபதி இளந்திரையன் கல்லூரி மாணவியின் கருத்தையும் கேட்டார். அதற்கு மாணவி, இந்த வழக்கில் நான் எந்தப்புகாரும் கொடுக்கவில்லை. அதனால் மேல் நடவடிக்கை வேண்டாம் என்று கூறினார்.

உதவி இன்ஜினீயர் கமலகண்ணன் மீது பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரில் முகாந்திரமும் இல்லை. மேலும் அந்த ஆடியோவில் பேசும் மாணவியும் நடவடிக்கை வேண்டாம் என்று கூறிவிட்டார். தனிப்பட்ட இருவர் பேசிக் கொள்ளும் ஆடியோ பெண்களுக்கு எதிரான குற்றமாக கருதமுடியாது. அதனால் எப்.ஐஆரை நீதிபதி ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்” என்றார்.

இதுகுறித்து உதவி இன்ஜினீயர் கமலகண்ணனிடம் கேட்டதற்கு, “என் மீது சுமத்தப்பட்ட புகாரில் உண்மையில்லை என்பதை நிரூபிக்கப்பட்டுள்ளது. தேவையில்லாமல் இந்த ஆடியோவை சிலர் பெரிதாகிவிட்டனர். என்னுடைய சஸ்பெண்ட் ஆர்டரையும் ரத்து செய்துவிட்டனர்” என்றார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி உதவி இன்ஜினீயர்களிடம் கேட்டதற்கு “உதவி இன்ஜினீயர் கமலகண்ணன் சிறப்பாக பணியாற்றக்கூடியவர். அவருக்கு பதவி உயர்வு கிடைப்பதை தடுக்க சிலர் செய்த சதிதான் இந்த ஆடியோ. கல்லூரி மாணவி புகார் கொடுக்காமலேயே உதவி இன்ஜினீயர் கமலகண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதிலிருந்தே இந்த ஆடியோ விவகாரத்தில் பின்னணியில் இருப்பவர்களின் செல்வாக்கை யூகிக்க முடியும். நீதிமன்றமே வழக்கில் முகாந்திரம் இல்லை எனக்கூறி எப்.ஐ.ஆரை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. அதைத்தொடர்ந்து உதவி இன்ஜினீயர் கமலகண்ணனின் சஸ்பெண்ட் ஆர்டரும் ரத்து செய்து கமிஷனர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவில் அவர் வேறு வார்டுக்கு இடமாற்றப்பட்டுள்ளார்” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *