`2017-ல் விபச்சார புரோக்கர், கருக்கலைந்த ட்வின்ஸ்’ – சந்தேக நோயால் மனைவியைக் கொலை செய்த காவலாளி

திருமணம்

சென்னை எம்.கே.பி.நகர், மேற்கு குறுக்குத் தெருவில் குடியிருந்தவர் சார்லஸ் (31). இவரின் மனைவி ரமணி (35). இவர்களுக்கு 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. தன்னை விட வயது மூத்தவரான ரமணியை சார்லஸ் திருமணம் செய்து கொண்டது தனிக்கதை.

இந்தநிலையில் இன்று அதிகாலை ரத்த வெள்ளத்தில் ரமணி வீட்டுக்குள் இறந்து கிடந்தார். அதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் எம்.கே.பி நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உதவி கமிஷனர் கோ,அரிக்குமார், எம்.கே.பி நகர் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.

கொலை செய்யப்பட்ட ரமணி

கொலை

சடலமாக ரத்த வெள்ளத்தில் கிடந்த ரமணியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ரமணியை கொலை செய்தது யாரென்று போலீஸார் விசாரித்தனர். கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது ரத்தக்கறைப்படிந்த அரிவாளோடு ரமணியின் கணவர் சார்லஸ் வெளியில் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதனால் ரமணியை கொலை செய்தது சார்லஸ் என போலீஸார் உறுதிப்படுத்தினர். இதையடுத்து சார்லஸை போலீசார் தேடிவந்தனர்.

சந்தேகம்

இந்தநிலையில் சார்லஸ், தலைமறைவாக இருக்கும் இடத்தைக் கண்டறிந்த போலீசார் அவரைக் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். உதவி கமிஷனர் கோ. அரிக்குமார், இன்ஸ்பெக்டர் தியாகராஜன் ஆகியோர் சார்லஸிடம் விசாரித்தனர். அப்போது அவர் ரமணியை கொலை செய்ததற்கான காரணத்தைக் கூறினார்.

சார்லஸிடம் உதவி கமிஷனர் கோ.அரிக்குமார் விசாரணை

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “சார்லஸ், காவலாளியாக வேலைபார்த்து வருகிறார். ஊரடங்கில் அவருக்கு வேலை இல்லை. அதனால் வீட்டில் இருந்துள்ளார். சார்லஸ், தன்னுடைய மனைவி ரமணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டுவந்துள்ளார்.

பத்தாம் வகுப்பு வரை படித்த நான், காவலாளியாகவும் துப்பரவு பணியாளராகவும் பல இடங்களில் வேலைப்பார்த்து வந்தேன். ஆனால் போதிய வருமானம் கிடைக்கவில்லை. அப்போதுதான் விக்கி என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் விபச்சார தொழில் செய்துவந்தார். நல்ல சம்பளம், சந்தோஷமான வாழ்க்கை என்பதால் நானும் அவருடன் சேர்ந்து விபச்சார புரோக்கராக மாறினேன்.

– சார்லஸ்

மூர்மார்க்கெட் அரிவாள்

அதனால் ரமணி, வியாசர்பாடியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். மனைவியும் இல்லாததால் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் சார்லஸ் சிரமப்பட்டு வந்துள்ளார். மனைவியின் நடத்தையில் சந்தேகம், சாப்பாடு போடாததால் ஆத்திரம் ஆகியவற்றால் ரமணியை கொலை செய்ய சார்லஸ் திட்டமிட்டுள்ளார்.

அரிவாள்
அரிவாள்

அதனால் சென்னை மூர்மார்க்கெட்டிற்கு சென்ற சார்லஸ், இளநீரை வெட்டும் அரிவாளை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் வியாசர்பாடிக்குச் சென்று மனைவி ரமணியை சமரசப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இருவரும் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கியுள்ளனர். அப்போது வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக ரமணியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்துள்ளார் சார்லஸ்.

ரமணி மரணம்

இதையடுத்து அரிவாளை எடுத்து ரமணியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அவரின் இடது பக்க தலை, கழுத்து, கை ஆகிய இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அதனால் ரத்தம் அதிகளவில் வெளியேறி அறை முழுவதும் ஆறாக ஓடியுள்ளது. ரத்தக்கறை படிந்த அரிவாளுடன் சார்லஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

சம்பவ இடத்திலேயே ரமணி துடிதுடித்து உயிரிழந்துள்ளார். சார்லஸிக்கு ஏற்கெனவே 2017-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. சார்லஸின் சந்தேக பார்வை அவரின் முதல் மனைவி மீதும் விழுந்துள்ளது. அதனால் அவர் சார்லஸை பிரிந்து சென்றுவிட்டார். அதன்பிறகுதான் சார்லஸ், தன்னை விட வயது மூத்தவரான ரமணியை 2-வதாக திருமணம் செய்துள்ளார்.

சார்லஸ்

இரட்டைக் குழந்தை

கடந்த 3 மாதங்களுக்கு முன் ரமணி கர்ப்பமடைந்துள்ளார். மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தபோது ரமணியின் வயிற்றில் இரட்டை குழந்தை இருப்பது தெரியவந்தது. ட்வின்ஸ் என்பதால் ரமணி சந்தோஷமடைந்தார். ஆனால் சார்லஸின் மனம் வேறுவிதமாக சிந்தித்தது. மனைவியிடம் அவர் தகராறு செய்தார்.

இந்தச் சமயத்தில் ரமணியின் கரு கலைந்தது. அதற்கும் ரமணியின் மீதே சார்லஸ் சந்தேப்பட்டுள்ளார். அதனால்தான் ரமணி அம்மா வீட்டுக்குச் சென்றுள்ளார். ரமணியின் அம்மா, அப்பா கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் வேலைப்பார்த்துவருகின்றனர். ரமணியின் பெற்றோர் சார்லஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரளித்துள்ளனர். அதன்பேரில் மனைவியைக் கொலை செய்த குற்றத்துக்காக சார்லஸை கைது செய்துள்ளோம்” என்றனர்.

விபச்சார வழக்கு

போலீஸ் விசாரணையின் போது சார்லஸ் இன்னொரு முக்கிய தகவல் ஒன்றை கூறியுள்ளார். அது என்னவென்றால் தன்னுடைய அம்மா துப்பரவு தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். பத்தாம் வகுப்பு வரை படித்த நான், காவலாளியாகவும் துப்பரவு பணியாளராகவும் பல இடங்களில் வேலைப்பார்த்து வந்தேன். ஆனால் போதிய வருமானம் கிடைக்கவில்லை.

சார்லஸிடம் உதவி கமிஷனர் கோ. அரிக்குமார் விசாரணை

இந்தச்சமயத்தில் சார்லஸிக்கு விக்கி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. விக்கி, பல்லாவரத்தில் விபச்சார தொழில் செய்து வந்துள்ளார். தினமும் 250 ரூபாய் பேட்டா, மாதம் 15,000 ரூபாய் சம்பளம் என்பதால் விபச்சார தொழிலில் புரோக்கராக சார்லஸ் மாறியுள்ளார். 2017-ம் ஆண்டு சார்லஸை போலீசார் கைது செய்துள்ளனர்.

மனைவி மீதான சந்தேகத்தால் அவரைக் கொலை செய்த சார்லஸ் தற்போது சிறைக்கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார் என்கின்றனர் போலீசார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *