ஸ்டார் தொகுதிகளில் அ.தி.மு.கவினரின் உள்ளடி வேலைகள் – கலக்கத்தில் வேட்பாளர்கள்

சென்னை கொளத்தூர், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அ.தி.மு.க மற்றும் பா.ம.க வேட்பாளர்களுக்கு கூட்டணி கட்சிகளிடமிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தத் தடவையும் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதனால் இந்தத் தொகுதி ஸ்டார் அந்தஸ்த்தை மீண்டும் பெற்றிருக்கிறது. கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்து சைதை துரைசாமி போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 2016-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஸ்டாலினை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் ஜே.சி.டி பிரபாகர் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதனால் இந்தத் தேர்தலில் ஜே.சி.டி பிரபாகர் வில்லிவாக்கம் தொகுதியில் களமிறங்குகிறார். தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வர் வேட்பாளருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் யாரை களமிறக்கலாம் என அ.தி.மு.க தலைமை ஆலோசனை நடத்தியது. பின்னர் தென்சென்னை வடக்கு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராமை வேட்பாளராக அறிவித்திருக்கிறது. இவர் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனுதாக்கல் செய்திருந்தார். எனெனில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியை குறி வைத்து பா.ஜ.க-வினர் ஆரம்ப கட்ட தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக நடிகை குஷ்பூ, இந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தையின்போது அ.தி.மு.கவின் கூட்டணியிலிருக்கும் பா.ம.க-வுக்கு சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி ஒதுக்கப்பட்டது. அதனால் ஆயிரம் விளக்கு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கையில் ஆதிராஜாராம் இருந்தார். ஆனால் அவரை கொளத்தூர் தொகுதியின் வேட்பாளராக கட்சித் தலைமை அறிவித்தது. இது வடசென்னை அ.தி.மு.கவினருக்கு அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. அதோடு கொளத்தூர் தொகுதி அ.தி.மு.கவினரிடையே கடும் கோஷ்டி பூசல் ஏற்படுத்தியது.

கொளத்தூர் தொகுதியில் போட்டியிட மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ்பாபு, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, திருநங்கை அப்சரா ரெட்டி என கட்சியினர் விருப்ப மனுதாக்கல் செய்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு கட்சித் தலைமை சீட் வழங்கவில்லை. இதனால் கொளத்தூர் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் ஆதிராஜாராமுக்கு ஓட்டு கேட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட அ.தி.மு.கவினர் மட்டுமல்லாமல் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த சிலர் செல்லவில்லை. மு.க.ஸ்டாலினுக்கு எதிராக களமிறக்கப்பட்டிருக்கும் அ.தி.மு.க வேட்பாளருக்கு எதிராக உள்ளடி வேலைகள் நடக்கத் தொடங்கியிருப்பது கட்சித் தலைமையின் கவனத்துக்குச் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. அதனால் அதிருப்தியிலிருக்கும் அ.தி.மு.க-வினரிடம் கட்சித் தலைமை பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

வடசென்னை அ.தி.மு.கவைச் சேர்ந்த சிலர் தங்களின் சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். அதில் மாதவரம் முருகன் என்பவர், இந்த தடவை கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் நிச்சயம் தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்கு ஏற்றவர் அதே தொகுதியில் மக்களின் நன்மதிப்பை பெற்ற அண்ணன் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி. அந்த தொகுதியில் உள்ளவர்களுக்கே கள நிலவரம் தெரியும். எனவே கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், பரிசீலனை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கொளத்தூர் சத்யா, கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அவர்கள் பாதம் பணிந்து என் போன்ற அடிமட்ட தொண்டனின் வேதனைப் பகிர்வு
கழகமே கோவில், அம்மாவே தெய்வம் அம்மா அவர்கள் மறைவுக்குப் பிறகு கட்சி கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இருவரின் தலைமை ஏற்று கழக போராளியாக இன்று வரை எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி இந்நாள் வரை கழக பணியே தன்பணி என்று தன்னலம் பாராமல் கொளத்தூர் பகுதியில் தன்னை மக்களுக்காக முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு பல்வேறு நலதிட்டங்களை கொரோனா மற்றும் பேரிடர் காலத்தில் உயிரை துச்சமாக கருதி மக்கள் சேவையாற்றியவர் அண்ணன் கொளத்தூர் டி.கிருஷ்ணமூர்த்தி

கொளத்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆதிராஜாராமை மாற்ற வேண்டும் என கட்சித் தலைமைக்கு அந்தத் தொகுதியிலிருந்து எதிர்ப்புகள் சென்ற நிலையில் நேற்று தேர்தல் பிரசாரத்தை ஆதிராஜாராம் தொடங்கியிருக்கிறார். மாவட்டச் செயலாளரான ஆதிராஜாராம் கட்டுப்பாட்டிலிருக்கும் தொகுதிகளில் ஒன்று சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி. இந்தத் தொகுதியில் அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சியான பா.ம.க வேட்பாளர் ஏ.வி.ஏ.கஸ்ஸாலி போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் முதல் தடவையாக போட்டியிடுகிறார். அதனால் இந்தத் தொகுதியும் ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றியிருக்கிறது. உதயநிதி ஸ்டாலினை வெற்றி பெற வைக்க வேண்டும் என தி.மு.க-வினர் தொகுதி முழுவதும் பம்பரமாக தேர்தல் வேலைகளைச் செய்துக் கொண்டிருக்கின்றனர். இந்தத் தொகுதியில் அதிகளவில் சிறுபான்மையினரின் ஓட்டுக்கள் உள்ளதால் எளிதாக உதயநிதி ஸ்டாலினை வெற்றி பெற வைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் தி.மு.கவினர் உள்ளனர்.

இந்தநிலையில் பா.ம.க. வேட்பாளர் ஏ.வி.ஏ கஸ்ஸாலியை ஆதரித்து பிரசாரம் செய்ய இரண்டு அ.தி.மு.க பகுதிச் செயலாளர்கள் ஆர்வம் காட்டாமல் அமைதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பா.ஜ.க-வுக்கு சீட் கிடைக்காததால் அவர்களும் அதிருப்தியில் உள்ளனர். சென்னையில் ஸ்டார் தொகுதி அந்தஸ்த்தைப் பெற்ற கொளத்தூர், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியின் உள்ளடி வேலைகளால் தி.மு.க.வினர் உற்சாகத்துடன் வலம் வருகின்றனர். ஆயிரம் விளக்கு தொகுதியில் ஸ்டாலின் போட்டியிட்ட போது அவரிடம் வெற்றி வாய்ப்பை இழந்த ஆதிராஜாராம், மீண்டும் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினுடன் தேர்தலில் மோதுகிறார். இந்தத் தடவை கொளத்தூர் தொகுதியில் ஆதிராஜாராம் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பே கட்சிக்குள்ளேயே எதிர்ப்புகள் கிளம்பியிருப்பதால் என்ன செய்யலாம் என அ.தி.மு.க தலைமை ஆலோசித்து வருகிறது. கொளத்தூர் தொகுதியில் வேட்பாளரை மாற்றினால் மட்டுமே அ.தி.மு.கவின் ஓட்டுக்கள் முழுவதும் சிதறாமல் விழும் என்கின்றனர் அந்தத் தொகுதி அ.தி.மு.கவினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *