சென்னையில் தங்கம் விற்கிற விலையில் 140 சவரன் வரதட்சணை- தற்கொலை செய்த பட்டதாரி பெண்

தங்கம் விற்கிற விலையில் 140 சவரன் வரதட்சணையாக கேட்ட தகராறில் திருமணமான ஓராண்டுக்குள் பட்டதாரி பெண் தற்கொலை செய்துள்ளார்.

ஒரு சவரன் தங்கம், 41,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதனால், திருமணத்துக்கு தங்கத்தை வரதட்சணையாக கொடுப்பவர்கள் விலையை கேட்டு அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர். முன்பெல்லாம் ஒரு கிலோ தங்கம் வரதட்சணையாக கொடுத்து திருமணத்தை நடத்திவைத்தனர்.

அதிலும் தென்மாவட்டங்களில் கேட்கவே வேண்டாம் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்கூட தங்களின் மகளுக்கு ஒரு கிலோ தங்கத்தை சர்வசாதாரணமாக வரதட்சணையாக கொடுத்து தங்களின் கெத்தை காட்டிவந்தனர். தற்போதுள்ள சூழலில் தங்கத்தின் விலை கொரோனா காலகட்டத்திலும் நாளுக்கு நாள் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

தங்கத்தின் விலை உயர்வுக்கு மற்ற தொழில்கள் கொரோனா காலக்கட்டத்தில் நலிவடைந்துள்ள சூழலில் தங்கத்தின் மீது அனைவரும் முதலீடு செய்துவருகின்றனர். அதனால் ஒரு சவரன் தங்கம், 50,000 ரூபாய் வரை விற்கபடும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். அதனால் ஏழைகள் இனி தங்களின் மகள்களுக்கு தங்கம் என பெயரிட்டு மகிழ்ந்து கொள்ளலாம்.

நிரேஷ்குமார்
நிரேஷ்குமார்

அதனால் ஏழை, எளிய மக்களால் தங்கத்தை வாங்க முடியாது. தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் திருமணத்துக்கு வரதட்சணையாக பேசப்பட்டதை விட குறைவான தங்கமே கொடுக்க முடியும் என பெண் வீட்டினர் மாப்பிள்ளை வீட்டாரிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.

இந்தச் சூழலில் சென்னை, சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் பிரியங்கா (வயது 24). எம்.பி.ஏ பட்டதாரி. இவருக்கும் பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினீயராக பணியாற்றி வரும் சென்னை காட்டாங்கொளத்துாரைச் சேர்ந்த நிரேஷ்குமார் (28) என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்தது.

திருமணமான இரண்டு மாதங்களிலேயே கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு ஏற்பட்டது. அதனால், பிரியங்கா தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். இந்நிலையில் கடந்த 29-ம் பிரியங்கா தனது வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்ததும் சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் பிரியங்காவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பிரியங்கா, மரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் வரதட்சணை கொடுமையால் அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பிரியங்காவின் கணவர் நிரேஷ்குமாரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் கூறுகையில், திருமணத்தின் போது பிரியங்காவுக்கு 140 சவரன் நகை போடுவதாக பெண் வீட்டினர் கூறியுள்ளனர். ஆனால் 40 சவரன் நகை மட்டுமே போட்டதாகவும், இதனால் இரு வீட்டாருக்கும் இடையே அடிக்கடி நகை தொடர்பாக தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.

100 சவரன் நகை போட்டால் மட்டுமே சேர்ந்து வாழலாம் என நிரேஷ்குமாரும் அவரது பெற்றோரும் பிரியங்காவிடம் கூறியதாக தகவல் கிடைத்துள்ளது. அதனால் ஏற்பட்ட மனவருத்தத்தில் பிரியங்கா, தற்கொலை செய்துள்ளார். பிரியங்காவின் பெற்றோர் அளித்த புகாரில் போலீஸார் நிரேஷ்குமாரை பெண்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச்சட்டப்பிரிவின் கீழ் வழக்குபதிவு கைது செய்துள்ளோம் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *