சென்னையில் செல்போனை திருடிக்கொண்டு பைக்கில் தப்பிய சிறுவனை ஆட்டோவில் விரட்டிச் சென்று பெண் இன்ஜினீயர் பிடித்துள்ளார்.
சென்னை ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர் கீதபிரியா (28). இன்ஜினீயரிங் படித்த இவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரகடத்தில் உள்ள பிரபல செல்போன் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். 20-ம் தேதி கீதபிரியாவுக்கு வேலைக்கு செல்ல அதிகாலை 5.30 மணியளவில் வீட்டை விட்டு புறப்பட்டார்.

5.50 மணிக்கு வரும் ஆபீஸ் பஸ்சுக்காக அவர் காத்திருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 சிறுவர்கள், கீதபிரியாவின் கையிலிருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர். அவர்களைப் பிடிக்க கீதபிரியா ஆட்டோவில் விரட்டினார்.
அசோக்நகர் 11-வது அவென்யூ, கேஎப்சி அருகிலிருந்து ஒரு கி.மீட்டர் தூரத்தில் உள்ள கே.கே.நகர் அரசு மருத்துவமனை அருகே வரை சிறுவர்கள் சென்ற பைக்கை வழிமறித்து நின்றது ஆட்டோ. அதனால் பைக்கில் சென்ற சிறுவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.
ஆட்டோவிலிருந்து இறங்கிய கீதபிரியா, பைக்கை ஓட்டிய சிறுவனின் சட்டையை பிடித்துக் கொண்டார். அதைப்பார்த்த மற்றொரு சிறுவன், செல்போனை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தான். அவனை ஆட்டோ டிரைவர் பிடிக்க முயன்றார். ஆனால் அதற்குள் அந்தச் சிறுவன் தப்பிவிட்டான்.
இதையடுத்து கீதபிரியா, சிறுவனிடம் செல்போன் கேட்டார். அதற்கு அவன் உங்களுடைய செல்போன் தப்பிய ஓடியவனிடம் இருக்கிறது. என்னை விட்டுவிடுங்கள் என்று கெஞ்சினான். ஆனால், கீதபிரியா, அந்தச் சிறுவனை போலீஸிடம் பிடித்துக் கொடுத்தார்.
பின்னர் குமரன் நகர் காவல் நிலையத்தில் செல்போன் வழிபறி செய்யப்பட்டது குறித்து கீதபிரியா புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து பிடிப்பட்ட சிறுவனிடம் விசாரித்தனர். விசாரணையில் பைக்கைத்திருடிய சிறுவர்கள், கிண்டியில் ஒருவரிடம் அதிகாலை நேரத்தில் செல்போனை பறித்துள்ளனர். பிறகு கீதபிரியாவிடமும் செல்போனை பறித்துள்ளனர்.
வீட்டுக்கு வந்த கீதபிரியா தன்னுடைய செல்போனுக்கு, போன் செய்துள்ளார். அதை எடுத்து பேசிய சிறுவன், செல்போனை கொடுக்க வேண்டும் என்றால் என்னுடைய ப்ரெண்டை என்னிடம் ஒப்படையுங்கள் என்று பேரம் பேசிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டான். இந்தத் தகவலையும் கீதபிரியா, குமரன் நகர் காவல் நிலையத்துக்கு தெரிவித்தார்.

செல்போன் சிக்னல் மூலம் அவனையும் போலீசார் பிடித்தனர். அவனிடமிருந்த கீதபிரியாவின் செல்போனை பறிமுதல் செய்தனர். செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 சிறுவர்களையும் சிறுவர் சீர்திருத்தபள்ளியில் போலீசார் சேர்த்தனர். அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள, பைக் ஆகியவற்றை சட்டப்படி கீதபிரியா உள்பட சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இன்ஜினீயர் கீதபிரியாவின் தைரியம் குறித்த தகவல் சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலுக்கு தெரியவந்தது. உடனே கீதபிரியாவை அவர் நேரில் வரவழைத்து பாராட்டினார். அப்போது பணபரிசும் புத்தகத்தையும் கொடுத்தார்.