வாடகைக்கேட்ட ஹவுஸ் ஓனர்; கத்தியால் குத்திய பெயின்டர் – மாமனாரைக் காப்பாற்ற முயன்ற மருமகள் உயிரிழப்பு

சென்னையில் வீட்டு வாடகைப் பிரச்னையில் இளம்பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணின் கணவரும் மாமனாரும் கத்திக்குத்து காயங்களடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை சூளைமேடு, ராதாகிருஷ்ணன்நகர், 2-வது தெருவைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (69). ஓய்வு பெற்ற ஊழியர். இவரின் மகன் சதீஷ் (35). இவர் வாகனங்களைப் பழுதுபார்க்கும் வேலை செய்துவருகிறார். சதீஷின் மனைவி சுகன்யா (32).

சந்திரமோகனுக்குச் சொந்தமாக வீடுகள் உள்ளன. அந்த வீட்டை அவர் வாடகைக்கு விட்டுள்ளார். அதில் ஒரு வீட்டில் கேரளாவைச் சேர்ந்த நாராயணன் (56), தனது குடும்பத்தினருடன் வாடகைக்கு வசித்துவந்தார்.

நாராயணன்
நாராயணன்

நாராயணன், பெயிண்டராக வேலைப்பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வாடகை பணத்தை 6 மாதங்களாக நாராயணன் கொடுக்கவில்லை. மேலும் சந்திரமோகனிடம், கடனாக ரூ.80 ஆயிரத்தை நாராயணன் வாங்கியுள்ளார்.

இதனால் கடனையும் வாடகைகயும் சந்திரமோகன், நாராயணனிடம் கேட்டுவந்துள்ளார். ஆனால், நாராயணன், பணத்தைக் கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். அதன்காரணமாக இருவருக்கும் வாய்தகராறு அடிக்கடி ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த 26-ம் தேதி இரவு நாராயணனிடம் சந்திரமோகன் வாடகைப் பணம் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த நாராயணன், கத்தியை எடுத்து வந்து சந்திரமோகனைச் சரமாரியாகக் குத்தியுள்ளார்.

அதனால் அவர் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டுள்ளார். சந்திரமோகனின்ன சத்தம் கேட்டு அவரின் மகன் சதீஷ், மருமகள் சுகன்யா ஆகியோர் மாடிக்கு வந்துள்ளனர்.

சந்திரமோஹன்
சந்திரமோஹன்

அப்போது நாராயணன், சந்திரமோகனை கத்தியால் குத்திக்கொண்டிருந்துள்ளார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சதீஷ், சுகன்யா, சந்திரமோகனைக் காப்பாற்ற முயன்றுள்ளனர்.

அப்போது சதீஷ், சுகன்யாவையும் நாராயணன் கத்தியால் குத்தியுள்ளார். அதில் அவர்களுக்கும் கத்திக்குத்து விழுந்து ரத்தம் வந்துள்ளது.

மூன்று பேரின் அலறல் சத்தம் கேட்டு அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கு வந்துள்ளனர். அவர்களைப் பார்த்ததும் நாராயணன் தப்பி ஒடிவிட்டார்.

பின்னர் மூன்று பேரையும் மீட்டு ஆட்டோ மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுகன்யா, இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சந்திரமோகனுக்கும் சதீஷிக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சூளைமேடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமிஷனர் முத்துபாண்டி, இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபு மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர்.

சதீஷ்
சதீஷ்

வாடகைத் தகராறில் சுகன்யாவைக் கொலை செய்த குற்றத்துக்காவும் தந்தை மகனை கொலை செய்ய முயற்சி செய்த குற்றத்துக்காகவும் நாராயணனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஏற்கெனவே கடந்த ஜூலை மாதத்தில் வங்கி ஊழியரை அவரின் வீட்டில் வாடகைக்கு இருந்த இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்தார். தற்போது வாடகை தகராறில் மாமனாரைக் கொலை செய்ய முயன்ற வாடகைத்தாரரால் மருமகள் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் சூளைமேடு பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *