சென்னையில் 3 ஏரிகளில் மண்ணை நிரப்பி சாலை.. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு

சென்னையில் 3 ஏரிகளில் மண்ணை நிரப்பி சாலை விரிவாக்கம் செய்யப்படுவதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பல்லாவரம் நகராட்சி பகுதிகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. இதை கருத்தில் கொண்டு ஜிஎஸ்டி, ராஜீவ் காந்தி சாலைகளுடன் பரங்கிமலை-மடிப்பாக்கம், வேளச்சேரி- மேடவாக்கம் சாலைகளை இணைக்கும் வகையில் புறவழிச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

இதன்படி பல்லாவரம்-துரைப்பாக்கம் இடையே ரேடியல் சாலை அமைக்கப்பட்டது. இந்த 4 வழிச் சாலை, பல்லாவரம், கீழ்க்கட்டளை, பள்ளிக்கரணை நாராயணபுரம் ஆகிய 3 ஏரிகளை கடந்து செல்கிறது. இதற்காக 3 ஏரிகளும் இரண்டாகப் பிரித்து மண்ணை கொட்டி சாலை அமைக்கப்பட்டது.

தற்போது போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதன்காரணமாக 3 ஏரிகளிலும் மண்ணை கொட்டி நிரப்பி சாலையை விரிவாக்கம் செய்து வருகின்றனர். 

இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த சாலையால் 3 ஏரிகளும் பாழாகிவிடும். மேம்பாலம் அமைக்காமல் ஏரியில் மண்ணை கொட்டி சாலை அமைப்பது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *