அக். 31 வரை மெரினாவில் அனுமதி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையை சுத்தப்படுத்த வேண்டும். கடற்கரையில் மீன் விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, ரமேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜரானார்.
“மெரினா கடற்கரையில் தள்ளுவண்டி கடைகள் அமைப்பது தொடர்பான டெண்டர் நவம்பர் 9-ம் தேதி இறுதி செய்யப்படும். தமிழகத்தில் அக்டோபர் 31-ம் தேதி வரை பூங்காக்கள், கடற்கரைகள், திரையரங்குகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வரும் 31-ம் தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது” என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார்.
“மெரினாவில் தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டரை இறுதி செய்வது, மீன் சந்தை திறப்பது, மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது தொடர்பாக நவம்பர் 11-ம் தேதிக்குள் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.