சென்னை வெளிவட்டச் சாலை நவம்பரில் திறப்பு விழா காண்கிறது.
வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரை 62.3 கி.மீ. தொலைவுக்கு வெளிவட்டச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதில் வண்டலூர் முதல் திருநின்றவூர் நெமிலிச்சேரி வரை போக்குவரத்து நடைபெறுகிறது.
செங்குன்றம் அருகே நிலம் கையகப்படுத்துவதில் எழுந்த சிக்கலால் அங்கு மட்டும் சாலைப் பணி முடிக்கப்படாமல் இருந்தது.
தற்போது அங்கு நிலப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு சாலை பணிகள் தீவிரமடைந்துள்ளன.
வரும் நவம்பர் முதல் வாரத்தில் வெளிவட்டச் சாலை முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று தமிழ்நாடு சாலை வளர்ச்சி நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த வெளிவட்டச் சாலை 4 தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கிறது. வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து எண்ணூர் துறைமுகத்துக்கு வரும் கனரக வாகனங்கள் இனிமேல் வெளிவட்டச் சாலையில் பயணிக்கும்.
இதன்மூலம் சென்னையின் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாலையில் 4 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.