சென்னையில் வாடகை பிரச்னை; பெயின்டர் தற்கொலை- இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்#shocking video

சென்னை புழலில் வாடகை பிரச்னையில் பெயின்டர் தற்கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவத்தில் புழல் இன்ஸ்பெக்டர் பென்சாம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை புழல் பாலவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். பெயின்டர். இவர் நேற்றிரவு தீக்குளித்தார். பின்னர் உடலில் தீ பிடித்த நிலையில் தெருவில் ஓடிவந்துள்ளார். அதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் சீனிவாசனின் குடும்பத்திளர் தீயை அனைத்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது சீனிவாசனின் உறவினர் ஒருவர், அவரிடம் என்ன நடந்தது என்று விசாரித்தார். சீனிவாசன் கூறியதை அவர் தன்னுடைய செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

அந்த வீடியோவில் சீனிவாசனிடம் என்ன நடந்தது என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு சீனிவாசன் இன்ஸ்பெக்டர் அடித்தான். ஹவுஸ் ஓனர் இன்ஸ்பெக்டரை இழுத்திட்டு வந்தான் என்று கூறுகிறார் அப்போது வீடியோ எடுத்த நபரை இன்ஸ்பெக்டர், வெளியில் செல்லும்படி கூறுகிறார்.

அதற்கு இந்த நபர் இவர் என்னுடைய அண்ணன். இப்படி அடிச்சி இப்படிபண்ணியிருக்கீங்க என்று அந்த நபர் இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்கிறார். பின்னர் சீனிவாசன், இன்ஸ்பெக்டர் அடித்தான் வீட்டு வாடகை… காலி பண்ண சொன்னான் என்று சீனிவாசன் கூறுகிறார்.

இந்த வீடியோவையடுத்து புழல் இன்ஸ்பெக்டர் பென்சாமை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். சிகிச்சையிலிருந்த சீனிவாசன் இன்று உயிரிழந்தார். இதுதொடர்பாக புழல் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்துவருகின்றனர்.

ஏற்கெனவே சென்னையில் வாடகை பிரச்னை காரணமாக ஹவுஸ் ஓனர் கொலை செய்யப்பட்டார். தற்போது வாடகை பிரச்னையில் வாடகைக்கு குடியிருந்தவர் தற்கொலை செய்துள்ளார்.

கொரோனா காலகட்டத்தில் வருவாயை இழந்தவர்களிடம் வாடகையை மனித நேயத்துடன் வீட்டின் உரிமையாளர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று அரசும் நீதிமன்றமும் தெரிவித்துள்ளது. ஆனாலும் வீட்டு வாடகையில் சிலர் கடுமையாக நடந்துக் கொள்வதால் இதுபோன்ற விபரீத சம்பவங்கள் நடக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *