ரோந்து வாகனத்திலும் புகார் அளிக்கலாம் என்று சென்னை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.
சென்னையில் 12 காவல் மாவட்டங்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு காவல் மாவட்டத்திலும் பொதுமக்களுக்கு உதவ ரோந்து வாகனங்கள் வலம் வருகின்றன. ஒட்டுமொத்தமாக 353 ரோந்து வாகனங்கள் சுழற்சி முறையில் சென்னையை சுற்றி வருகின்றன.
காவல் கட்டுப்பாட்டு அறை 100-க்கு வரும் அழைப்புகளின்பேரில் மக்களின் இருப்பிடத்துக்கே சென்று பிரச்சினைகளுக்கு ரோந்து போலீஸார் தீர்வு காணுகின்றனர். இந்நிலையில் போலீஸாரின் ரோந்து வாகனத்திலும் பொதுமக்கள் புகார் மனுக்களை அளிக்கும் திட்டத்தை சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்துள்ளார்.