சென்னையில் சொகுசு காரில் ஆடுகளைத் திருடிய நடிகர்கள்

சென்னையில் ஆடுகள் திருடிய வழக்கில் சினிமா நடிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 சென்னை புறநகர் பகுதியில் ஆடுகள் திருட்டு தொடர்கதையாகிவருகிறது. மாதவரத்தைச் சேர்ந்த பழனி என்பவருக்குச் சொந்தமான ஆடு கடந்த அக்டோபர் 8-ம் தேதி திருட்டுப் போனது. 

இதுகுறித்து அவர், மாதவரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். உதவி கமிஷனர் அருள்சந்தோஷமுத்து தலைமையில் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து திருடப்பட்ட ஆட்டைத் தேடிவந்தார். 

நிரஞ்சன்குமார்
நிரஞ்சன்குமார்

 இந்தநிலையில் கடந்த 8-ம் தேதி மாதவரம்  மஞ்சம்பாக்கம், ரிங் ரோடு பகுதியில் சொகுசு காரில் வந்த இரண்டு இளைஞர்கள் ஆடுகளைத் திருட முயற்சி செய்துள்ளார். அதைப்பார்த்த பொதுமக்கள் அவர்களைப் பிடித்து மாதவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

போலீஸாரின் விசாரணையில் அவர்கள் இருவரும் புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த நிரஞ்சன்குமார் (36), அவரின் தம்பி லெனின்குமார் (32) எனத் தெரியவந்தது. இவர்கள் இருவரும் நீதான் ராஜா என்ற படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்துள்ளனர். 

 இவர்களின் தந்தை விஜயரங்கன், சினிமா தயாரிப்பாளர். நீதான் ராஜா படம் கடந்தாண்டு திரைக்கு வந்துள்ளது. ஆனால் அந்தப் படம் நஷ்டத்தை ஏற்படுத்தியதால் இருவரும் ஆடுகளைத் திருட ஆரம்பித்திருக்கின்றனர். 

பள்ளி படிப்பை முடித்த இருவருக்கும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை சிறுவயதிலிருந்தே இருந்துள்ளது. ஆனால் வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. 

அதனால் சொந்தமாக படம் தயாரிக்க முடிவு செய்துள்ளனர். அதற்கு பணம் தேவைப்பட்டதால் டூவிலரில் சென்று ஆடுகளைத் திருடியுள்ளனர். அதில் கிடைத்த பணத்தை வட்டிக்கு விட்டுள்ளனர். மேலும், ஆடுகளைத் திருட சொகுசு கார் ஒன்றையும் மினி லாரி ஒன்றையும் இவர்கள் சொந்தமாக வாங்கியுள்ளனர். அந்தக் காரில் சென்னையையொட்டியுள்ள கிராமங்களுக்குச் செல்லும் இவர்கள், தங்களை சினிமா இயக்குநர் என்று அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். 

ஆடு திருட பயன்படுத்தப்பட்ட கார், சரக்கு வாகனம்.
ஆடு திருட பயன்படுத்தப்பட்ட கார், சரக்கு வாகனம்.

பிறகு சூட்டிங்கிற்கு இடம் பார்க்க வந்ததாக அங்குள்ளவர்களிடம் பேச்சுக் கொடுப்பார்கள். ஆள் நடமாட்டம் இல்லாத நேரங்களில் ஆடுகளைத் திருடி சொகுசு கார் மூலம் சென்னைக்கு கொண்டு வந்து விற்றுவிடுவார்கள். 

அதன்மூலம் கிடைத்த பணத்தை சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஃபைனான்ஸ் செய்துள்ளனர். அடுத்து புதிய படம் ஒன்றைத் தயாரிக்க இருவரும் திட்டமிட்டுள்ளனர். 

 இவர்கள் இருவரையும் கைது செய்த போலீஸார் ஆடுகளைத் திருட பயன்படுத்திய சொகுசு கார் மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்துள்ளனர். ஆடு திருட்டு வழக்கில் நடிகர்கள் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *