ரு;.26 கோடி இரிடியம் மோசடி; நடிகை ஜெயசித்ராவின் மகன் நடிகர் அம்ரீஷ் சிக்கிய கதை

சினிமா ஃபைனான்சியரான நெடுமாறனைச் சந்தித்த நடிகை ஜெயசித்ராவின் மகன் நடிகர் அம்ரீஷ், இரிடியம் பிசினஸ் குறித்து பேசி அவரை ஏமாற்றிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் நெடுமாறன் (68). சினிமாவுக்கு ஃபைனான்ஸ் மற்றும் ஷூட்டிங் ஸ்பார்ட்டுக்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவரின் மாறன் ஷுட்டிங் ஸ்பார்ட்டில் வைத்து நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ் கணேஷ் நடித்த நானே என்னுள் இல்லை என்ற படத்தின் ஷூட்டிங் நடந்திருக்கிறது.

அப்போதுதான் நெடுமாறனுக்கும் அம்ரீஷிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சினிமா தொடர்பாக இருவரும் பேசியநிலையில் இரிடியம் பிசினஸ் தொடர்பாக நெடுமாறனிடம் அம்ரீஷ் பேசியிருக்கிறார். வெளிநாடுகளில் இரிடியம் பிசினஸிக்கு நல்ல விலை இருக்கிறது.

அதனால் இந்தத் தொழிலில் ஒரு தடவை முதலீடு செய்தால் லட்சங்களில் லாபம் பார்க்கலாம் என ஆசை வார்த்தைகளை கூறியிருக்கிறார். அதை நம்பிய நெடுமாறனும் இரிடியம் பிசினஸில் பணத்தை முதலீடு செய்ய சம்மதித்தார்.

ஜெயசித்ராவின் மகன் நடிகர் அம்ரீஷ்
ஜெயசித்ராவின் மகன் நடிகர் அம்ரீஷ்

2015-ம் ஆண்டு இரிடியம் கலசத்துடன் நெடுமாறன் வீட்டுக்கு அம்ரீஷ் மற்றும் அவரின் கூட்டாளிகள் 13 பேர் சென்றனர். அதில் வெளிநாட்டிலிருந்து வந்த இரண்டு விஞ்ஞானிகளும் இருந்தனர். இரிடியம் கலசத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து சான்றிதழ்களை அளித்தனர்.

பின்னர் இரிடியம் பிசினஸ் தொடர்பாக மலேசியாவில் பேச்சுவார்த்தை நடத்த இந்தக் கும்பல் திட்டமிட்டது. அதற்காக தனி விமானத்தில் நெடுமாறன் மற்றும் அம்ரீஷ் தலைமையிலான டீம் மலேசியாவுக்குச் சென்றது.

அங்கு நட்சத்திர ஹோட்டலில் இரிடியத்தை வாங்க ஒரு கம்பெனியிலிருந்து சிலர் டிப்டாப் கோட் ஷூட்வுடன் வந்திருந்தனர். பின்னர் இரிடியம் பிசினஸ் டீலிங் நடந்தது.

அப்போது 60 கோடி ரூபாய்க்கு இரிடியம் கலசத்தை வாங்க ஒப்புக் கொண்ட அந்தக் கம்பெனி அதற்கான அக்ரிமெண்ட்டை நெடுமாறனுடன் போட்டுக் கொண்டது. அடுத்த சில மணி நேரத்திலேயே நெடுமாறன் பெயரில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு 9 லட்சம் ரூபாய் அட்வானஸாக அதில் வரவு வைக்கப்பட்டது. அதனால் நெடுமாறன், இரிடியம் பிசினஸ் டீம்மை முழுமையாக நம்பினார்.

பின்னர் அனைவரும் சென்னை திரும்பினர். டீலிங் பேசியபடி மீதத்தொகைக்காக நெடுமாறன் காத்திருந்தார். ஆனால் பணம் வரவில்லை. அதனால், நெடுமாறன், நடிகர் அம்ரீஷ் மற்றும் அவருடன் வந்தவர்களிடம் விவரத்தைக் கூறினார். ஆனால் பணம் வரவில்லை.

நானே என்னுள் இல்லை
நானே என்னுள் இல்லை படம்

அதன்பிறகு நெடுமாறன், இரிடியத்தை வாங்க அம்ரீஷ் தரப்புக்கு தான் கொடுத்த 26 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கான வங்கி ஆவணங்களுடன் சென்னை போலீஸ் கமிஷனரைச் சந்தித்து புகாரளித்தார்.

அதன்பேரில் இந்த வழக்கை விசாரிக்கும்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் வித்யா ஜெயந்த் குல்கர்னிக்கு கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையிலான போலீஸ் டீம் விசாரணை நடத்தியது. அப்போது இரிடியம் மோசடியில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தலைமறைவாகி விட்டனர்.

இந்தச் சூழலில் நடிகர் அம்ரீஷ், சென்னைக்கு வந்துள்ள ரகசிய தகவல் இன்ஸ்பெக்டர் மேகனாவுக்கு கிடைத்தது. உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவின் edf டீம் விரைந்துச் சென்று நடிகர் அம்ரீஷைப் பிடித்தது.

அவரிடம் விசாரித்தபோது இரிடியம் மோசடி நடந்தது எப்படி என்ற விவரம் தெரியவந்தது. இதையடுத்து அம்ரீஷை கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில் தன்னுடைய மகன் அம்ரீஷை போலீஸார் அழைத்துச் சென்ற தகவலையறிந்த நடிகை ஜெயசித்ரா சென்னை வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று (16.3.2021) வந்தார். உயரதிகாரிகளைச் சந்தித்து அம்ரீஷ் குறித்து பேசினார்.

அப்போது, இரிடியம் மோசடியில் அம்ரீஷை கைது செய்யவுள்ளதாக போலீஸார் நடிகை ஜெயசித்ராவிடம் கூறினர். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், கமிஷனர் அலுவலகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவின் edf டீம்மைச் சேர்ந்த போலீஸ் உயரதிகாரி ஒருவர், “நெடுமாறனை சதுரங்க வேட்டை பட பாணியில் இந்தக் கும்பல் ஏமாற்றியிருக்கிறது. நடிகர் அம்ரீஷ் மூலம் நெடுமாறனுக்கு அறிமுகமான இரிடியம் மோசடி கும்பல் ஒரு காப்பர் கலசத்தை( குடத்தை ) அவரிடம் காண்பித்திருக்கிறது.

பின்னர் அந்தக் கலசத்தில் இரிடியம் பவர் இருப்பதாகக் கூறிய இந்தக் கும்பல் அதை நிரூபிக்க சில டெஸ்ட்களை செய்து நெடுமாறனை நம்ப வைத்திருக்கிறது. பின்னர் கலசத்தில் இரிடியம் பவர் இருப்பதை நிரூபிக்க இங்கிலாந்து ராணுவத்தில் பணியாற்றுவதாகக் கூறி இரண்டு விஞ்ஞானிகள் நெடுமாறனின் வீட்டுக்கு வந்து கலசத்தைப் பரிசோதனை செய்து சான்றிதழை அளித்திருக்கின்றனர்.

அதன்பிறகு இரிடியம் பவர் உள்ள அந்தக் கலசத்தை 26 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார் நெடுமாறன். பின்னர் அதைக் ஒரு அறையில் வைத்திருக்குமாறு நெடுமாறனிடம் அந்தக் கும்பல் கூறியிருக்கிறது.

அந்த அறைக்குள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் கட்டளையிட்டுக்கிறது. அதையும் மீறி உள்ளே போனால் இரிடியத்தின் பவரால் உடல் நலம் பாதிக்கப்பட்டு விடும் என எச்சரித்திருக்கிறது. அதனால் அந்த அறைக்குள் கலசத்தை (குடத்தை) நெடுமாறன் வைத்திருந்திருக்கிறார்.

இதையடுத்து மலேசியாவில் இரிடியம் பவர் உள்ள கலசத்தை விற்பனை செய்ய நெடுமாறனை அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு இரிடியம் மோசடி கும்பல் செட்டப் செய்து வைத்தவர்கள் ஒரு கம்பெனியின் பெயரைச் சொல்லி அறிமுகமாகியிருக்கிறார்கள்.

அதன்பிறகு அந்தக் கலசத்தை 60 கோடி ரூபாய்க்கு அந்தக் கம்பெனி விலை பேசி அட்வானஸாக 9 லட்சத்தை நெடுமாறனின் வங்கி கணக்கிற்கு அனுப்பி மீதி தொகையை தருவதாக ஒப்பந்தம் போட்டு ஏமாற்றியிருக்கிறது.

இந்த வழக்கில் நடிகை ஜெயசித்ராவின் மகன் நடிகர் அம்ரீஷை கைது செய்திருக்கிறோம். மீதமுள்ள 12 பேரை தேடிவருகிறோம்” என்றார்.

“கைது செய்யப்பட்ட நடிகர் அம்ரீஷ், கோலிவுட்டில் பிரபல இசையமைப்பாளராக இருந்திருக்கிறார் .பின்னர் தன்னுடைய அம்மா ஜெயசித்ராவின் தயாரிப்பில் நானே என்னுள் இல்லை என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார் .எதிர்பார்த்தப்படி அந்தப்படம் ஓடவில்லை. அதனால்தான் இரிடியம் பிசினஸில் நடிகர் அம்ரீஷ் ஈடுபட்டு தற்போது சிறைக் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார்” என்கின்றனர் போலீஸார்.

நெடுமாறனிடம் விசாரித்தபோது நிஜத்தில் ஒரு சதுரங்க வேட்டை படம் பார்த்தது போன்ற அனுபவம் போலீஸாருக்கு கிடைத்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *