சென்னையில் போலி ஆவணங்களைக் கொடுத்து வங்கிகளில் வாகன கடன்களை வாங்கி கோடிக்கணக்கில் மோசடி செய்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மோசடி கும்பல்
சென்னை வேளச்சேரி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேலாளர் தில்லைகோவிந்தன் அளித்த புகாரில்,
வங்கிகளில் வாகனக் கடன் வாங்கி விட்டு அதை திருப்பி செலுத்தாமல் ஒரு கும்பல் மோசடி செய்து வருவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகாரளித்தார்.
அதன்பேரில் சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
உடனடியாக மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் கமிஷனர் தேன்மொழி, துணை கமிஷனர் நாகஜோதி ஆகியோரின் மேற்பார்வையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

துணை கமிஷனர் முனைவர் கே.சரவணக்குமார் தலைமையில் தனிப்படை போலீஸார், 27-ம் தேதி அதிகாலையில் சென்னை நீலாங்கரை, முட்டுக்காடு பகுதிக்குச் சென்றனர்.
அங்கு சொகுசு பங்களாவில் பதுங்கியிருந்த நீலாங்கரையைச் சேர்ந்த முகமது முசாமில் (34), அய்யாதுரை (32), கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பாலவிஜய் (35) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சொகுசு கார்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் இவர்கள் மூன்று பேரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள பேங்க் ஆப் இந்தியாவின் கிளை, எழும்பூரில் உள்ள விஜயா வங்கி கிளை, வேளச்சேரி, திருவான்மியூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை, அடையாறு யுகோ வங்கி கிளை,
ஆழ்வார்பேட்டையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் பணியாற்றும் மேலாளர்களை புரோக்கர்கள் மூலம் அணுகியுள்ளனர்.
பின்னர் தங்களது வருமானம் அதிகளவில் இருப்பது போல போலியான வருமான வரி தொடர்பான ஆவணங்களை தயாரித்து வங்கியில் கொடுத்து கடன்களை வாங்கியது தெரியவந்தது.
சொகுசு கார்கள், பங்களா
மேலும், இவர்கள், நீலாங்கரை, பனையூர், முட்டுக்காடு போன்ற இடங்களில் சொகுசு பங்களாக்களை வாடகைக்கு எடுத்து தங்கிக் கொண்டு வீட்டின் முன் சொகுசு கார்களை நிறுத்தி வைத்துள்ளனர்.
அதையெல்லாம் பார்த்த வங்கி அதிகாரிகள், வாகன கடன்களை கொடுத்திருக்கின்றனர்.
கடன்களை வாங்கிய இந்தக் கும்பல், அதை திரும்ப செலுத்தாமல் தலைமறைவாகி விட்டனர். இவர்கள் கொடுத்த ஆவணங்களிலிருக்கும் முகவரி, செல்போன்களை மாற்றிவிட்டு சொகுசாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்தக் கும்பல் 3 கோடியே 86 லட்சம் ரூபாய் வரை வங்கிக்கு இழப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தக் கும்பலிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆடி, பிஎம்டபுள்யூ உள்ளிட்ட சொகுசு கார்களை வங்கிகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த இந்தக் கும்பலை போலீஸார் தற்போது கைது செய்தனர்.
துரிதமாக செயல்பட்ட தனிப்படை போலீஸாரை சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “கைதான முகமது முசாமில், அய்யாதுரை, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பாலவிஜய் ஆகிய மூன்று பேரும் கூட்டாளிகள். இவர்கள், ஆடம்பரமாக வாழ்வதைப் போல மற்றவர்களிடம் தங்களைக் காண்பித்துக் கொள்வார்கள்.
அதற்காக லட்சகணக்கில் வாடகை கொடுத்தாலும் சொகுசு பங்களாக்களில் தங்குவார்கள். வங்கி அதிகாரிகள், புரோக்கர்களை அந்த சொகுசு பங்களாக்களுக்கு வரவழைப்பார்கள்.
பிசினஸ் மேன்கள்
அப்போது தங்களை பிசினஸ் மேன்கள் என அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். பங்களா வீட்டுக்கு வங்கி அதிகாரிகள் வரும்போது, வீட்டின் முன் விலை உயர்ந்த கார்களை நிறுத்தி வைத்து பந்தா காட்டுவார்கள்.
இவர்கள் மூன்று பேரின் ஃலைப் ஸ்டைலைப் பார்க்கும் வங்கி அதிகாரிகள், கோடிக்கணக்கில் கடனை கொடுத்துள்ளனர். கார் லோன் என வங்கிகளில் பணத்தை வாங்கும் இவர்கள், அந்தப் பணத்தில் புத்தம் புதிய சொகுசு கார்களை வாங்குவார்கள்.
அப்போது கார் ஷோரூம்பிலிருக்கும் சிலர் மூலம் கார்களை தங்களின் பெயர்களில் பதிவு செய்து கொள்வார்கள்.
ஆனால் இந்த விவரங்கள் வங்கிகளுக்கு தெரியாது. கார்கள் தங்களின் பெயரில் இருப்பதால் வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்தாமல் செல்போன் நம்பர்களையும் முகவரியையும் மாற்றிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார்கள்.
இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இந்தக் கும்பலை பிடித்துள்ளோம். அவர்களுக்கு உதவியவர்களின் விவரங்களைச் சேகரித்துவருகிறோம்” என்றனர்.