நடிகர் வடிவேல் பாணியில் கார் திருட்டு – விபத்தால் சிக்கிய திருடன்

சென்னையில் நடிகர் வடிவேல் பாணியில் ஆசிரியர் ஒருவரிடமிருந்து காரை ஏமாற்றி சென்ற பிரபல திருடனை மதுரவாயல் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த நூதன திருட்டு குறித்த விரிவான செய்தி இது!

ஆசிரியர்

சென்னையை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் பகுதியை சேர்ந்தவர் சாய்சுப்பிரமணி(24), ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இவரின் நண்பரின் வீடு வில்லிவாக்கத்தில் உள்ளது. சாய்சுப்பிரமணி, மேற்படிப்பு படித்து வருவதால் வில்லிவாக்கத்தில் தங்கியிருந்தார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக தன்னுடைய காரை விற்க முடிவு செய்தார் சாய்சுப்பிரமணி. அதற்காக கார்களை விற்கும் இணையதளத்தில் தன்னுடைய காரின் போட்டோ மற்றும் செல்போன் நம்பர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்தார். அதைப்பார்த்து சாய்சுப்பிரமணியிடம் சிலர் பேசினர்.

கடந்த சில தினங்களுக்கு முன் சாய்சுப்பிரமணியிடம் பொழிச்சல்லூரிலிருந்து பால்ராஜ் என்பவர் செல்போனில் பேசியுள்ளார். அப்போது அவர், காரை நேரில் பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். உடனே சாய்சுப்பிரமணி, வில்லிவாக்கத்துக்கு வரும்படி பால்ராஜிடம் கூறியுள்ளார்.

அதன்படி அங்கு வந்த பால்ராஜ், காரை ஓட்டிப்பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்கு சம்மதித்த சாய்சுப்பிரமணி, தானும் காரில் ஏறிக் கொண்டார்.

நடிகர் வடிவேல்
நடிகர் வடிவேல்

கார்

இதையடுத்து வில்லிவாக்கத்திலிருந்து காரை பால்ராஜ் மதுரவாயலுக்கு ஓட்டி வந்தார். அப்போது கார், தனக்கு பிடித்துவிட்டது. எவ்வளவு ரூபாய் என்று கேட்டுள்ளார் பால்ராஜ்.

அதற்கு சாய்சுப்பிரமணி, காருக்குரிய பணத்தைக் கூறியதும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளும்படி பால்ராஜ் பேரம் பேசியுள்ளார்.

பின்னர் காரின் விலை முடிவு செய்யப்பட்டது. பணத்தை மதுரவாயலில் உள்ள நண்பரிடம் வாங்கித் தருவதாகக் கூறிய பால்ராஜ், அங்குச் சென்றுள்ளார்.

அப்போது மதுரவாயல் ஏரிக்கரை பஸ் நிறுத்தம் அருகே காரை நிறுத்தினார். அப்போது, பஸ் நிறுத்தத்தில் அமர்ந்திருந்த ஒருவரை பால்ராஜ் கையைக் காட்டி அழைத்தார்.

கார் சர்வீஸ்

ஆனால் அவர் அமைதியாக இருந்தார். இதையடுத்து காரிலிருந்த சாய்சுப்பிரமணியிடம், பஸ் நிறுத்தத்தில் இருந்தவர் தன்னுடைய நண்பர் என்றும் அவரை அழைத்துவரும்படி கூறியுள்ளார் பால்ராஜ்.

அதை நம்பி காரை விட்டு சாய்சுப்பிரமணி இறங்கி, பால்ராஜ் கூறியவரை நோக்கி நடந்துச் சென்றார். அப்போது பால்ராஜ், காரை எடுத்துக் கொண்டு வேகமாகச் சென்றுவிட்டார். அதைப்பார்த்த சாய்சுப்பிரமணி அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் தன்னுடைய காரை வாங்குவது போல நடித்து திருடிக் கொண்டு சென்ற பால்ராஜ் மீது மதுரவாயல் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் கோபால் ஆகியோர் வழக்கு பதிவு செய்து பால்ராஜ், காரை தேடிவந்தனர்.

லாரி திருட்டு, ஆடு திருட்டு

இந்தநிலையில் சாய்சுப்பிரமணியனுக்கு கார் சர்வீஸ் சென்டரிலிருந்து போன் வந்தது. அதில், உங்களுடைய காரை சர்வீஸ் செய்துவிட்டோம் என்று தெரிவித்தனர்.அவர்களிடம் சாய்சுப்பிரமணி விவரத்தைக் கூறினார். அப்போது காரை ஒருவர் சர்வீஸிக்காக விட்டுச் சென்றார் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து திருடப்பட்ட கார், சர்வீஸ் சென்டரில் இருக்கும் தகவலை இன்ஸ்பெக்டரிடம் சாய்சுப்பிரமணி கூறினார். உடனே போலீஸார் சம்பந்தப்பட்ட சர்வீஸ் சென்டருக்கு சென்று விசாரித்தனர்.

அப்போது விபத்தில் கார் சிக்கியது தெரியவந்தது. அதனால் பால்ராஜைப் பிடிக்க சர்வீஸ் சென்டரிலேயே போலீஸார் காத்திருந்தனர்.

இந்தச் சமயத்தில் காரை எடுக்க பால்ராஜ் அங்கு வந்தார். அப்போது அவரை மடக்கிய போலீஸார், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அப்போது பால்ராஜ் காரைத் திருடி விற்க முயன்றபோது விபத்தில் சிக்கியுள்ளார். அதனால் சேதமடைந்த காரின் முன்பகுதியை சரிசெய்ய சர்வீஸ் சென்டரில் விட்டதாக கூறினார்.

மேலும் பால்ராஜின் உண்மையாளன பெயர் சந்துரு என்கிற ராஜபாண்டியன் (34) எனத் தெரியவந்தது. மதுரையைச் சேர்ந்த இவர், சென்னை பொழிச்சலூரில் குடும்பத்துடன் குடியிருந்துவருகிறார்.

இவர் மீது லாரி திருட்டு வழக்கு, ஆடு திருட்டு வழக்குகள் உள்ளன. சந்துரு, வேறுயாரிடமாவது ஏமாற்றியுள்ளாரா என்று போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

நடிகர் வடிவேல், முத்துகாளை மற்றும் அவரின் காமெடி டீம் டூவிலரை விலைக்கு வாங்குவது போல ஒரு காட்சி திரைப்படத்தில் வரும்.

அப்போது டூவிரை விற்பவரிடம் பைக்கை ஓட்டிபார்த்து விட்டு வாங்குவதாகக் கூறுவார்கள். அதன்படி நடிகர் வடிவேலை அங்கு நிற்க வைத்துவிட்டு முத்துகாளையும் இன்னொருவரும் பைக்கில் அங்கிருந்து செல்வார்கள்.

நீண்ட நேரமாகியும் அவர்கள் திரும்பி வரமாட்டார்கள். அப்போது டூவிலர் விற்பவரிடமிருந்து நடிகர் வடிவேல் எஸ்கேப் ஆக முயற்சி செய்வார். ஆனால் அவர் விடமாட்டார்.அதைப்போலத்தான் ஆசிரியர் சாய்சுப்பிரமணியிடமிருந்து நூதன முறையில் காரை ஏமாற்றி சென்றுள்ளார் சந்துரு.

நல்லவேளை கார் விபத்தில் சிக்கி கார் கம்பெனியின் சர்வீஸ் சென்டருக்கு சென்றதால் சந்துரு சிக்கிக் கொண்டார். இல்லையென்றால் அவ்வளவுதான். இணையதளத்தில் கார், டூவிலர்களை விற்பவர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் நிரூபித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *