வெள்ளை நிற செருப்பால் சிக்கிய செயின் பறிப்பு இளைஞர்கள்

சென்னை சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக கவிதா என்பவர் பணியாற்றிவருகிறார்.

ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி இரவு சென்னை திருவல்லிக்கேணி எம்எல்ஏ விடுதியில் பாதுகாப்பு பணிக்காக காவலர் ஒருவரின் பைக்கில் கவிதா சென்றார். பைக்கின் பின்னால் கவிதா அமர்ந்திருந்தார்.

திருவல்லிக்கேணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவானந்தசாலையில் சென்ற போது கவிதாவின் பைக்கின் பின்னால் இன்னொரு பைக்கில் வந்த இளைஞர்கள் கண் இமைக்கும் நேரத்தில் கவிதா அணிந்திருந்த 7 சவரன் தாலிச் செயின், 4 சவரன் தங்கச் செயின் ஆகியவற்றை பறித்தனர். இதில் கவிதா நிலைதடுமாறினார்.

பெண் காவலர் என்பதால் அடுத்த நிமிடமே சுதாரித்துக் கொண்டு கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினைப் பிடித்துக் கொண்டார்.

ஆனால் செயின் பறிப்பு திருடர்கள் பிடித்து இழுத்ததில் 9 சவரன் எடையுள்ள தங்கச் செயின்கள் சிக்கிக் கொண்டது.

4 சவரன் தங்கச் செயின் பாதி அறுந்ததில் 2 சவரன் செயின் மட்டும் கவிதாவின் கையில் மாட்டிக் கொண்டது.

இதுகுறித்து கவிதா திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகாரளித்தார். பெண் காவலரிடம் தங்கச் செயின் பறித்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

அதன்பிறகு அண்ணாசாலை, தர்கா பகுதியில் சாந்தி என்பவரிடமிருந்து 4 சவரன் தங்கச் செயினை பைக்கில் வந்த இளைஞர்கள் பறித்துச் சென்றனர்.

செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்கதையானதால் திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் பாஸ்கர், எழும்பூர் உதவி கமிஷனர் ரகுபதி ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு செயின் பறிப்பு திருடர்களை போலீஸார் தேடிவந்தனர்.

சம்பவம் நடந்த இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞன் ஒருவர் காலில் வெள்ளை நிற செருப்பை அணிந்திருந்தான்.

அதை அடையாளமாக வைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களை போலீஸார் தேடிவந்தனர். சிந்தாரிப்பேட்டை பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஒரே பைக்கில் மூன்று பேர் வந்தனர்.

அவர்களை போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரித்தபோது செயின் பறிப்பில் ஈடுபட்ட பட்டாபிராம் பகுதியை சேர்ந்த கிருபா(19), ஆவடியை சேர்ந்த பால் சிவா (எ) சிவகுமார்(20), அயனாவரத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் எனத் தெரிய வந்தது.

இதில் கிருபா மீது அண்னா நகர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. செயின் பறிப்பில் ஈடுபட விலை உயர்ந்த பைக்குகளை முதலில் திருடியிருக்கிறது.

இவர்களிடமிருந்து 16 சவரன் தங்கச் செயின்கள், 5 விலை உயர்ந்த பைக்குகளைப் போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

Follow us on :


Tamil Nirubar YouTube Channel : https://www.youtube.com/channel/UCUJKEellp__cXrCcVBtXMeg
Tamil Nirubar Twitter : https://twitter.com/TNirubar
Tamil Nirubar Facebook : https://www.facebook.com/tamil.nirubar.37/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *