ஒஎல்எக்ஸ் அறிமுகம்; ஒஹோன்னு வாழ்க்கை – சென்னை மருந்து விற்பனை பிரதிநிதியின் பலே பிளான்

சென்னையில் ஓஎல்எக்ஸ் இணையதளம் மூலம் அறிமுகமாகி சொகுசு கார்களுக்கு மாதம் 28000 ரூபாய் வாடகை தருவதாக கூறி மருந்து விற்பனை பிரதிநிதி , நூதன முறையில் மோசடி ஈடுபட்டு வந்துள்ளார். வசதியான குடும்பத்தை அவரின் ஃலைப் ஸ்டைலே சிறையில் தள்ளியிருக்கிறது.

வாடகைக்குக் கார்

சென்னை கோட்டூர்புரம், திருவள்ளூர் நகரைச் சேர்ந்தவர் ஆகாஷ் சிங் (26). இவர் கிண்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், “தனது பெயரிலும் தன்னுடைய தாய் சுசிலா பெயரிலும் இரண்டு கார்களை உள்ளன. அதை வாடகைக்கு கொடுத்து வந்தேன்.

கடந்த சில மாதங்களுக்கு முன் கிண்டி தொழிற்பேட்டை லேபர் காலனியைச் சேர்ந்த அருண்குமார் (32) என்பவரிடம் 28,000 ரூபாய் மாத வாடகைக்கு அம்மா பெயரிலிருக்கும் ஹோண்டா அமேஸ் காரை முதலில் கொடுத்தேன். 2 மாதங்களுக்கு பிறகு என் பெயரிலிருக்கும் சொகுசு காரை கொடுத்தேன்.

அருண்குமார் மீதான நம்பிக்கையில் என் நண்பர் கார்த்திக் என்பவரின் காரையும் அவருக்கு வாடகைக்கு கொடுத்தேன். காரை வாங்கிய அருண்குமார், சில மாதங்கள் சரியாக வாடகையைத் தந்தார். அதன்பிறகு அவர் வாடகைத் தரவில்லை. அதுகுறித்து விசாரிக்க அவரின் செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என பதில் வந்தது.

பின்னர் வீட்டையும் அருண்குமார் காலி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார். எனவே என்னை மோசடி செய்த அருண்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அருண்குமார்

விபத்துக்குள்ளான கார்

புகாரின் பேரில் கிண்டி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கர்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அருண்குமாரின் செல்போன் நம்பரின் சிக்னல் பல்லாவரத்தைக் காட்டியது. அங்குச் சென்ற போது அருண்குமார், தன்னுடைய மாமியார் வீட்டில் தலைமறைவாக இருந்தார்.

அவரைப்பிடித்து போலீஸார் விசாரித்த போது வாடகைக்கு எடுத்த கார்களுக்கு தன்னை உரிமையாளர் என்று அருண்குமார் கூறி, கார்களை அடமானம் வைத்தது தெரியவந்தது. மேலும் வாடகைக்கு எடுத்த கார்களை விற்க முயன்ற தகவலும் தெரிந்தது. வாடகைக்கு எடுத்த கார்த்திக் என்பவரின் கார், விபத்துக்குள்ளாகி சேதமடைந்திருந்தது.

இதையடுத்து அருண்குமாரிடமிருந்த கார்களை போலீஸார் மீட்டனர். பின்னர் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். கார் மோசடியில் ஈடுபட்ட அருண்குமார் குறித்து கிண்டி போலீஸார் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்தனர்.

மருந்து விற்பனை பிரதிநிதி

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “கார் மோசடி வழக்கில் கைதான அருண்குமார், எம்.பி.ஏ படித்திருக்கிறார். 2016-ம் ஆண்டு கோடம்பாக்கத்தில் உள்ள பிரபல கார் ஷோரூம்பில் சேல்ஸ்மேனாக அவர் பணியாற்றியிருக்கிறார். அப்போது பணம் கொடுத்து கார் புக்கிங் செய்த வாடிக்கையாளர்கள் 26 பேருக்கு கார்களை கொடுக்காமல் வேறுநபர்களுக்கு அருண்குமார் விற்றியிருக்கிறார்.

பறிமுதல் செய்யப்பட்ட கார்

அதுதொடர்பான குற்றச்சாட்டு காரணமாக வேலையிலிருந்து அருண்குமார் நீக்கப்பட்டிருக்கிறார். அதுதொடர்பான புகாரில் நந்தம்பாக்கம் போலீஸார் வழக்குபதிவு செய்து அருண்குமாரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர்.

ஜாமீனில் வெளியில் வந்த அருண்குமார், தற்போது மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். அவரின் ஆடம்பரமான வாழ்க்கைக்கு அதிகளவில் பணம் தேவைப்பட்டிருக்கிறது. வாங்கிய சம்பவம் அதற்கு போதவில்லை.

ஆடம்பர வாழ்க்கை

அதனால் ஆடம்பரமாக வாழ, தெரிந்தவர்கள், நண்பர்களிடம் வட்டிக்குப் பணம் வாங்கியிருக்கிறார். வட்டிக்கு வட்டி கொடுக்க கடன் அதிகம் வாங்கியதால் கடன்சுமையால் அருண்குமார் சிரமப்பட்டு வந்திருக்கிறார். ஆனால் அவர் கடன் வாங்கிய தகவல், குடும்பத்தினருக்கு தெரியாது. குடும்பத்தில் வசதி இருந்தாலும் கடன் தொல்லையால் அருண்குமார், சிரமப்பட்ட நேரத்தில்தான் ஒஎல்எக்ஸ் இணையதள விளம்பரத்தை பார்த்திருக்கிறார்.

அப்போது கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஆகாஷ் சிங், தன்னுடைய கார்களை குறைந்த வாடகைக்கு கொடுப்பதாக விளம்பரம் செய்திருந்தார். அதில் குறிப்பிட்டிருந்த ஆகாஷ் சிங்கின் செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டு அருண்குமார் பேசியிருக்கிறார். பின்னர் அவரிடம் மாதம் 28000 ரூபாய் என்று வாடகை பேசி மூன்று கார்களை வாங்கியிருக்கிறார். அந்தக் கார்களை அடமானம் வைத்து லட்சக்கணக்கில் பணத்தை பெற்றிருக்கிறார்.

ஓஎல்எக்ஸ் அறிமுகம்

வாடகை கொடுக்காததால் அருண்குமார் மீது ஆகாஷ் சிங் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் அருண்குமாரைக் கைது செய்திருக்கிறோம். இந்த வழக்கில் ஆகாஷ் சிங்கிற்கும் அருண்குமாருக்கும் ஒஎல்எக்ஸ் மூலம்தான் அறிமுகம் கிடைத்திருக்கிறது. எனவே, லட்சகணக்கான ரூபாய் மதிப்பிலான கார்களை வாடகைக்கு கொடுப்பவர்கள், முன்எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். இல்லையென்றால் முதலுக்கே ஆபத்தாகிவிடும்” என்றனர்.

இந்த வழக்கை திறம்பட விசாரித்த இன்ஸ்பெக்டர் கர்ணன் மற்றும் கிண்டி போலீஸாரை அடையாறு துணை கமிஷனர் விக்ரமன் பாராட்டியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *