ரயில் நிலையத்தில் நூதன திருட்டு

Chennai Police Arrested North Indian in Cellphone Theft Case

சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த செல்வகுமார், கடந்த 5ம் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையம் டிக்கெட் கவுண்டரில் வரிசையில் காத்திருந்தார். அப்போது அவரின் செல்போன் திருட்டு போனது. டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்தவர், செல்போனைக் காணாமல் அதிர்ச்சியடைந்தார்.

அதனால் தாம்பரம் ரயில்வே போலீஸாரிடம் செல்வகுமார் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது செல்வகுமார் டிக்கெட் வாங்க வரிசையில் நின்றுக் கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் நின்ற இளைஞர் ஒருவர், செல்போனைத் திருடும் காட்சி பதிவாகியிருந்தது. யார் அந்த இளைஞர் என போலீஸார் விசாரித்தனர்.செல்வகுமாரைப் போல இன்னும் சிலரும் தங்களின் செல்போன்கள் திருட்டுப் போனதாக காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

அதனால் தாம்பரம் டிக்கெட் கவுன்டர் பகுதியை போலீஸார் தீவிரமாக கண்காணித்தனர். சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். இந்தச் சமயத்தில் டிக்கெட் கவுன்டரில் டிக்கெட் எடுக்க வரிசையில் நின்றுக் கொண்டிருந்த இளைஞர், முன்னால் நின்றவரின் செல்போன் திருடுவதை போலீஸார் சிசிடிவி மூலம் பார்த்தனர் .

உடனடியாக அந்த இளைஞரை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர் .விசாரணையில் அவரின் பெயர் கொமண்டோகுமார், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. ஜார்கண்ட்டிலிருந்து சென்னை வந்த கொமண்டோ குமார், அமைந்தகரை பகுதியில் அறை எடுத்து தங்கியிருந்தார்.

மின்சார ரயிலில் சென்று கூட்டம் அதிகமாக இருக்கும் டிக்கெட் கவுன்டர்களை நோட்டமிட்டு அங்கு டிக்கெட் வாங்குவதைப் போல வரிசையில் நின்றபடி விலை உயர்ந்த செல்போனை கொமண்டோ குமார் திருடி வந்தது தெரிந்தது. அவரிடமிருந்து 26 விலை உயர்ந்த செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் கொமண்டோ குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *